திருவிடந்தை நித்திய கல்யாணப் பெருமாள் கோயில் தேரோட்டம் கோலாகலம்!
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தையில் 108 திவ்ய
தேசங்களில் 62வது திவ்ய தேசமாக விளங்கும் நித்திய கல்யாண பெருமாள்
திருக்கோயில் உள்ளது. இங்கு அகிலவல்லி தாயாருடன் மூலவர் ஆதிவராகப் பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
தொல்லியல்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயில், திருமண பரிகாரத் ஸ்தலமாக விளங்குகிறது. அதனால் இக்கோயிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்து செல்கின்றனர். இந்நிலையில் இக்கோயிலில் சித்திரை பிரம்மோற்சவ பெருவிழா கடந்த ஏப்.12 ஆம் தேதி கொடி
ஏற்றத்துடன் துவங்கியது.
சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வாக இன்று திருத்தேரோட்ட விழா விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக அலங்கரிக்கப்பட்ட தேரில்
ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் உற்சவ பெருமாள் திருத்தேரில் எழுந்துருளி
பக்தர்களுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து முக்கிய வீதிகளின் வழியாக தேர் பவனி சென்றது.
தேரினை ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து பெருமாளை தரிசனம்
செய்தனர். தொடர்ந்து வருகின்ற 22ஆம் தேதி தெப்ப உற்சவமும் நடைபெற உள்ளதாக கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.