#StopHarassment | கிருஷ்ணகிரியில் பாலியல் வன்கொடுமை நடந்த தனியார் பள்ளி இன்று மீண்டும் திறப்பு!
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே போலி என்சிசி முகாம் நடத்தி, சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதால் மூடப்பட்ட பள்ளி இன்று திறக்கப்படுகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே கந்திகுப்பம் கிராமத்தில் செயல்படும் தனியார் பள்ளியில் கடந்த 5ம் தேதி முதல் 9ம் தேதி வரை என்சிசி முகாம் நடந்தது. அதில் அந்த பள்ளியை சேர்ந்த 17 மாணவிகள் கலந்து கொண்டனர். முகாமில் பங்கேற்ற 8ம் வகுப்பு படித்து வரும் 13 வயது மாணவியை பயிற்சியாளரும், நாம் தமிழர் கட்சி நிர்வாகியுமான சிவராமன் (35) பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
மேலும் 13 மாணவிகள் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாகியுள்ளனர். இதுதொடர்பாக சிவராமன் உட்பட 11 பேரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். சிவராமன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்ததும், கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். தொடர்ந்து அந்தப் பள்ளியும் மூடப்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் இந்த வழக்கை சிறப்பு புலனாய்வு குழு விசாரித்தது. இதனிடையே இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளி சிவராமன் உயிரிழந்தார். அவரது தந்தையும் உயிரிழந்தார்.
2 மாவட்ட கல்வி அலுவலர், 2 வட்டார கல்வி அலுவலர், 2 வட்டார வள ஆசிரியர் பயிற்றுநர் மேற்பார்வையில் பள்ளி திறக்கப்படுகிறது. முன்னேற்பாடாக பள்ளியில் வகுப்பறை, அலுவலகம் உள்ளிட்ட பல இடங்களில் 38 சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு உள்ளது. பல்நோக்கு குழு சார்பில், சம்பந்தப்பட்ட பள்ளியின் ஆசிரியர்கள், மாணவர்கள் அவர்களின் பெற்றோர்களுக்கு பல்வேறு கட்ட உளவியல் ரீதியான ஆலோசனை வழங்கப்பட்ட பின் இன்று பள்ளி திறக்கப்படுகிறது.