“2032 அமெரிக்க அதிபர் தேர்தலில் ‘AI வேட்பாளர்’ வெல்ல வாய்ப்பு...” - எலான் மஸ்க் கருத்து!
2032-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில், ’செயற்கை நுண்ணறிவு’ சார்பிலான வேட்பாளர் போட்டியிடவும், வெல்லவும் வாய்ப்பிருப்பதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
டெஸ்லா நிறுவனத்தின் நிறுவனரான எலான் மஸ்க் கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பரில் அந்த நிறுவன பங்குகளில் ஏற்பட்ட சரிவு காரணமாக உலகின் நம்பர் ஒன் பணக்காரர் இடத்தில் இருந்து கீழே தள்ளப்பட்டார். இவர் டெஸ்லா, ஸ்பேக்ஸ் எக்ஸ், போரிங் கம்பெனி என பல்வேறு நிறுவனங்களை நடத்தி வருகிறார். டெஸ்லா கார்கள் வெளியான சில நாள்களிலேயே டெஸ்லாவின் பங்குகள் பல மடங்கு உயர்ந்ததால் உலகின் நம்பர் 1 பணக்காரர் என்ற பெருமையை மீண்டும் பெற்றார். பின்னர், ட்விட்டர் நிறுவனத்தை அதிக விலை கொடுத்து வாங்கியதால் தனது முதல் இடத்தை மஸ்க் இழந்தார்.
தொடர்ந்து கடந்த ஆண்டு ஜூன் மாதம் எலான் மஸ்க் தான் விட்ட இடத்தை மீண்டும் கைப்பற்றினார். இந்த ஆண்டு வரை அதனை தக்கவும் வைத்துக்கொண்டார். அண்மையில், பணக்காரர் பட்டியலில் முதலிடத்தில் இருந்த எலான் மஸ்க்கை பிரெஞ்சு தொழிலதிபர் பெர்னார்ட் அர்னால்ட் பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்தார். எலான் மஸ்க் அடுத்த தலைமுறை தொழில்நுட்பங்களை இன்றே ஆராய்வதில் ஆர்வம் உடையவர். அதற்கு அவர் வெளியிடும் கணிப்புகள் மற்றும் ஆருடங்கள் உலக அளவில் கவனம் பெறுவதும் வழக்கம்.
அதனையொட்டி, சமீபத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில், 2024 அமெரிக்க அதிபர் தேர்தலில் வெல்லப்போவது யார் என்ற கேள்வி எலான் மஸ்கிடம் எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளிக்கும்போது 2032-ம் ஆண்டும் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு வேட்பாளராக களமிறங்கவும், வெற்றி பெறவும் வாய்ப்பு இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
பல்வேறு நாடுகளிலும் தேர்தல் முன்னேற்பாடுகள் சூடுபிடித்து வரும் சூழலில், அவற்றில் ஏஐ நுட்பம் வாயிலாக வேண்டாத சக்திகள் குழப்பம் உருவாக்கவும் கூடும் என முன்னதாக எலான் மஸ்க் அறிவித்திருந்தார். இந்த ஏஐ தலையீட்டுக்கு அப்பால், ’தேர்தலில் நேரடி வேட்பாளராகவும் களமிறங்கும் என்றும், போட்டியிட்டு வெல்லவும் வாய்ப்புண்டு’ எனவும் எலான் மஸ்க் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.