Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

இருசக்கர வாகனத்தில் சென்ற சிறுவர்களை தாக்கிய போலீசார்: தலையில் காயத்துடன் 11 வயது சிறுவன் மருத்துவனையில் அனுமதி!

02:23 PM May 23, 2024 IST | Web Editor
Advertisement

சென்னையில் இருசக்கர வாகனத்தில் சென்ற அண்ணன் தம்பியை மதுபோதையில் இருந்த காவலர்கள் வாகனத்தில் துரத்தி லத்தியால் தாக்கியதாக கூறப்படுகிறது. தலையில் காயத்துடன் 11 வயது சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Advertisement

சென்னை புளியந்தோப்பு திரு.வி.க. நகர் 4-வது தெருவை சேர்ந்தவர் சாயின் ஷா.
இவர் தனியார் நிறுவனத்தில் வாகன ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். இவரது மூத்த மகன் முகமது பிலால் (17), இளைய மகன் முகமது அப்சர் (11). அப்பகுதியில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் மூத்த மகன் 10-ம் வகுப்பு மற்றும் இளைய மகன் 7ம் வகுப்பு படித்து வருவதாக தெரிகிறது.

நேற்று (மே 22) இரவு மகன்கள் இருவரும் தனது தாய்க்கு தேநீர் வாங்குவதற்காக இரு சக்கர வாகனத்தில் சென்னை பெரம்பூர் முரசொலி மாறன் மேம்பாலம் அருகே வந்துள்ளனர். அப்பொழுது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த உதவி ஆய்வாளர் அனுஜன், ஊர்க்காவல் படையை சேர்ந்த சந்தோஷ் இருவரும் இருசக்கர வாகனத்தில் வந்த சிறுவர்கள் இருவரை தடுத்து நிறுத்தியுள்ளனர். காவலர்கள் இரண்டு பேரும் முழு மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

காவலர்கள் மதுபோதையில் இருப்பதால் அவர்கள் ஏதேனும் தங்கள் மீது தாக்குதல் நடத்தி வழக்குப்பதியக் கூடும் என்ற அச்சத்தில் சிறுவன் முகமது பிலால் வாகனத்தை வேகமாக ஓட்டியுள்ளான். சிறுவர்களின் வாகனத்தை துரத்தியபடி அனுஜன் மற்றும் சந்தோஷ் இருவரும் அவர்கள் வாகனத்தில் வேகமாக சென்றுள்ளனர். ஒரு கட்டத்தில் அனுஜன் பின்னால் அமர்ந்திருந்த சந்தோஷ் சிறுவர்கள் ஓட்டி வந்த வாகனத்தின் பின்னால் அமர்ந்திருந்த முகமது அப்சர் தலையில் தடியால் தாக்கியதாக தெரிகிறது. 

இதனையடுத்து முகமது அப்சர் நிலை தடுமாறி நடுரோட்டில் கீழே விழுந்ததாகவும், இதனால் அவருக்கு தலையின் பின் பக்கத்தில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து உடனடியாக முகமது பிலால் தனது தாய், தந்தையருக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிறுவர்களின் தகப்பனார் மற்றும் தாயார் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மேலும் வேலை நேரத்தில் காவலர்கள் இருவரும் மதுபோதையில் இருப்பது எவ்வாறு நியாயம்? சிறுவர்கள் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்தால் அதனை பறிமுதல் செய்து பெற்றோருக்கு தகவல் தெரிவிக்க வேண்டுமே தவிர அதை தவிர்த்து கண் மூடித்தனமாக தாக்குவது எந்த விதத்தில் நியாயம்? என கேள்விகளை எழுப்பினர்.

தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த சென்னை பெரம்பூர் செம்பியம் காவல் நிலைய ஆய்வாளர் சிரஞ்சீவி, இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுவர்களின் பெற்றோர்களிடம் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். ஆனால் அவரது சமாதானத்தை ஏற்க மறுத்த சிறுவர்களின் பெற்றோர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து சம்பந்தப்பட்ட நபர்கள் முழு மதுபோதையில் இருந்ததாகவும், அவர்கள் மீது முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் காவல்துறைக்கு கோரிக்கை விடுத்தனர்.

பாதிக்கப்பட்ட சிறுவன் முகமது அப்சர் தற்போது அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு தலையில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை பெற்று வருகிறார்.

Tags :
ChennaiNews7Tamilnews7TamilUpdatesparentsPERAMBURPulianthopeTN Police
Advertisement
Next Article