“போப் பிரான்சிஸின் மறைவு ஆழ்ந்த வருத்தமளிக்கிறது.” - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் !
கத்தோலிக்க திருச்சபை மத தலைவரான போப் பிரான்சிஸ் (வயது 88) நிமோனியா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதனிடையே மருத்துவமனையிலிருந்து மார்ச் 23ம் தேதி போப் பிரான்சிஸ் வீடு திரும்பினார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி போப் பிரான்சிஸ் தற்போது உயிரிழந்துள்ளார்.
அவரின் மறைவு உலகெங்கிலும் உள்ள கத்தோலிக்க திருச்சபை கிறிஸ்தவர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது, மேலும் பல்வேறு உலக அரசியல் தலைவர்கள் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், பிரதமர் மோடி, நெதர்லாந்து பிரதமர் டிக் ஸ்கூஃப், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் போப் பிரான்சிஸ் மறைவிற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “கத்தோலிக்க திருச்சபையை கருணையாலும் முற்போக்கான விழுமியங்களுடனும் வழிநடத்தி ஒரு மாற்றத்தை ஏற்படுத்திய போப் பிரான்சிஸின் மறைவு ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது.
அவர் இரக்கமுள்ளவராகவும் மற்றும் சீர்திருத்தத்திற்கான குரலாகவும் இருந்தார், அவரின் பணிவு, தைரியம், மற்றும் கருணையானவர். "ஏழைகளுக்கான அவரது அர்ப்பணிப்பு, ஒதுக்கப்பட்டவர்களை அரவணைத்தல், நீதி, அமைதி மற்றும் மதங்களுக்கு இடையேயான உரையாடலுக்கான அவரது வாதங்கள் கத்தோலிக்க உலகிற்கு அப்பால் அவருக்கு மரியாதையைப் பெற்றுத் தந்தன."
இவ்வாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.