"கரூரில் அழுகுரல் ஏற்படுத்திய வலி என் நெஞ்சத்திலிருந்து அகலவில்லை" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
கரூரில் வேலுசாமிபுரம் பகுதியில் நேற்று இரவு தவெக தலைவர் விஜய் பிரசார கூட்டம் நடைபெற்றது. விஜய் பேசி முடித்து புறப்பட்ட பின்னர், கூட்டம் கலைந்து செல்லும்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
அப்போது கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து கரூர் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உயிரழந்த உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். மேலும் காயமடைந்தவர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தலத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், "இரவு முழுவதும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் சிந்திய கண்ணீரும், அவர்களது துக்கம் நிறைந்த அழுகுரல் ஏற்படுத்திய வலியும் என் நெஞ்சத்திலிருந்து அகலவில்லை." இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.