"1,000 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தும் ஆணையை திரும்ப பெற வேண்டும்" - ராமதாஸ் வலியுறுத்தல்!
பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், "கடலூர் மாவட்டம், கடலூர் மாநகர அருகாமை பகுதிக்கு உட்பட்ட தியாகவல்லி, குடிகாடு மற்றும் சுற்று பகுதிகளில் உள்ள நொச்சிக்காடு, திருச்சோபுரம், ராசாப்பேட்டை, சித்திரப்பேட்டை, நடுத்திட்டு, அம்பேத்கர் நகர், வள்ளலார் நகர், நந்தன் நகர் உள்ளிட்ட 18 கிராம எல்லைக்கு உட்பட்ட சுமார் 1,000 ஏக்கர் நிலப்பரப்பில், சுமார் 360 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சிப்காட் தொழிற்பூங்கா அமைப்பதற்காக நிலங்களை கையகப்படுத்துவதற்கான அரசாணை தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்டு, நிலங்களை கையகப்படுத்துவதற்காக சிறப்பு மாவட்ட அலுவலர் தலைமையிலான நில எடுப்பு குழுவும் நியமிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே கடந்த 2007-ஆம் ஆண்டில் இப்பகுதியில் கடலூர் பவர் கார்ப்பரேஷன் என்கிற தனியார் அனல் மின் நிலையத்திற்காக நிலங்கள் கையகப்படுத்த முயன்ற போது 7.9.2007 மற்றும் 28.11.2007 தேதிகளில் நடந்த கருத்து கேட்பு கூட்டங்களில் அப்பகுதி மக்கள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து, பல்வேறு தொடர் போராட்டங்களையும் நடத்தினர். பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் 16.9.2007 அன்று நொச்சிக்காடு கிராமத்தில் சுற்று வட்டார பகுதி மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தினேன். அதை தொடர்ந்து 10.12.2007 அன்று கடலூரில் எனது தலைமையில் அந்த பகுதி மக்களை கொண்டு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இவற்றின் காரணமாக அந்தத் திட்டம் கைவிடப்பட்டது.
ஏற்கனவே கடலூரில் உள்ள சிப்காட் தொழிற்சாலை, குடியிருப்புகள் மற்றும் விளைநிலங்களுக்கு நடுவில் இருப்பதால் சுற்றியுள்ள 20 கிலோ மீட்டர் பரப்பளவுக்கு சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சிப்காட் தொடங்கியதிலிருந்தே அடிக்கடி அங்கு விபத்துக்கள் நடந்து உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது. அடிக்கடி நச்சு வாயுக்கள் வெளியேறுவதுமாக அப்பகுதி கிராமங்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளதாக அந்த பகுதி மக்கள் கூறுகின்றனர். கெமிக்கல் தீபகற்பம் என அழைக்கப்படும் இன்னொரு போபாலாக கடலூர் சிப்காட் விளங்குவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகின்றனர். தொழிற்சாலைகளின் கழிவுகள் ஆற்றிலும், நீரோடைகளிலும் கலப்பதால் குடிநீர், நிலத்தடி நீர், விவசாயம், மீன் வளம் பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் பெண்களும் உடலளவில் பாதிக்கப்பட்டிருக்கலாம் அல்லது அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் பாதிக்கப்படலாம் என்று கருதி அப்பகுதி பெண்களை திருமணம் செய்ய பிற ஊர்களின் ஆண்கள் தவிர்ப்பதால் பலரும் முதிர்கன்னிகளாக உள்ளனர். 2007-ல் தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி மையம் நடத்திய 'நீரி' ஆய்வு முடிவில் மற்ற பகுதிகளை காட்டிலும் இங்கு வசிக்கக் கூடியவர்களுக்கு 200 மடங்கு புற்றுநோய் தாக்குவதற்கான அபாயம் உள்ளதாக தெரிவித்தது.
ஏற்கன்வே தியாகவல்லியில் உள்ள இ.ஐ.டி.பாரி தொழில் நிறுவனம் வேப்பமர விதையிலிருந்து பூச்சிக்கொல்லி மருந்து தயாரிப்பதால் அசுத்தமான காற்றும், துர்நாற்றமும் வீசுவதாக கூறுகிறார்கள். இந்த நிலையில் மேலும் தொழிற்சாலைகள் தொடங்குவது அப்பகுதி மக்களை உயிரோடு அழிப்பதற்கு சமமாகும். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள சிப்காட் தொழில் பூங்காவில் எந்த மாதிரியான தொழில் நிறுவனங்கள் வருகின்றன என்பது அறிவிக்கப்படவில்லை.
இந்த கிராமங்களில் வெட்டிவேர் சாகுபடி பெருமளவில் செய்யப்பட்டு ஒரு ஏக்கரில் 10 டன் அளவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. மேலும் வெட்டிவேர், சவுக்கு, முந்திரி நாற்றங்கால், முந்திரி உடைப்புத் தொழில் என ஆயிரக்கணக்கான விவசாயிகளுக்கும், கூலித் தொழிலாளர்களுக்கும் வாழ்வாதாரமாக விளங்குகிறது. அதுபோல் மீன்பிடித் தொழிலை நம்பியுள்ள மீனவர்களின் வாழ்வாதாரமும் உள்ளது. பொதுவாக இப்பகுதி முழுவதும் நிலம், நீர், காற்று மாசுபடுவதுடன், கடல் வளமும் பாதிக்கப்படும்.
எனவே, அப்பகுதியினரின் வாழ்வாதாரத்தை பாதித்து, சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் சிப்காட் தொழில் பூங்காவுக்காக நிலங்களை கையகப்படுத்தும் பணிகளை நிறுத்தி அதற்கான ஆணையை திரும்ப பெற வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்". இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.