Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சபரிமலையில் தொடர்ந்து அதிகரிக்கும் பக்தர்கள் கூட்டம் | திணறும் கோயில் நிர்வாகம்!

12:03 PM Dec 24, 2023 IST | Web Editor
Advertisement

சபரிமலையில் தொடர்ந்து அதிகரிக்கும் பக்தர்கள் கூட்டத்தால், 12மணி
நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.

Advertisement

சபரிமலையில் தொடர்ந்து பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. நேற்று மட்டும் சுமார்
97,287 பக்தர்கள் சன்னிதானத்திற்கு வருகை தந்துள்ளனர். இன்று காலை 7 மணி வரை
21000 பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று
தரிசனம் செய்வதுடன், புல்மேடு பாதை வழியாகவும் இதுவரை 1லட்சம் பக்தர்கள்
சபரிமலைக்கு வந்துள்ளனர். பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் பம்பையில்
கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அதேநேரம், இனிவரும் காலங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கும் பட்சத்தில், பத்தனம்திட்டா மாவட்டத்தின் பல பகுதிகளில் வாகன கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வாய்ப்புள்ளது. தங்கயங்கியுடன் கூடிய ஊர்வலம் நேற்று காலை ஆரன்முளா ஸ்ரீ பார்த்தசாரதி கோயிலிலிருந்து புறப்பட்ட நிலையில் நாளை மறுநாள் சபரிமலை சென்றடைந்து 27ம் தேதி மண்டல பூஜையுடன் நிறைவடைகிறது. அன்று இரவு 10:00 மணிக்கு கோயில் நடை அடைக்கப்பட்டு மண்டலக்காலம் நிறைவு பெறும்.

அதன் பின்னர் மகர விளக்கு கால பூஜைகளுக்காக டிச. 30 மாலை 5:00 மணிக்கு நடை திறக்கப்படும். சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதாகச் சொல்லப்பட்டாலும், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் மண்டல பூஜையின் முதல் 28 நாட்களில் சுவாமி தரிசனம் செய்த பக்தர்களின் எண்ணிக்கையும், கோயிலுக்கு கிடைத்த வருமானமும் குறைவு தான் என திருவிதாங்கூர் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. இருந்தாலும் மண்டல பூஜை முடிய போகும் காலம் வரை பக்தர்கள் கூட்டம் குறையாமல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

தொடர்ந்து பக்தர்கள் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். மண்டல பூஜையன்று இன்னும் அதிகமான பக்தர்கள் வர வாய்ப்புள்ளதால், என்ன செய்வதெனத் தெரியாமல் கோயில் நிர்வாகம் குழப்பமடைந்துள்ளது. சபரிமலையில் தற்போது அதிகாலை 3 மணிக்கு கோயில்
நடைதிறக்கப்பட்டது முதல், பகல் 12 மணிக்கு முன்பாகவே 50,000 க்கும் அதிகமான
பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருவதாகச் சொல்லப்படுகிறது. இந்த ஆண்டு காட்டு
வழிப்பாதையாக வரும் பக்தர்களின் எண்ணிக்கையே அதிகம் என சொல்லப்படுகிறது.

இந்த பாதையில் டிசம்பர் 20 ம் தேதி வரை மட்டும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான
பக்தர்கள் வந்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன்
கோயில் நவம்பர் 17ம் தேதி திறக்கப்பட்டது. ஒரு மாதத்திற்கு மேல் ஆகியும்
தற்போது வரை சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் குறைந்தபாடில்லை. மாறாக நாளுக்கு
நாள் அதிகரித்து வருகிறது. வழக்கமாக மண்டல பூஜை நிறைவடையப் போகும் சமயத்தில்
தான் சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். அதற்கு பிறகு
மகரஜோதி தரிசனத்திற்கே அதிகமான பக்தர்கள் கூடுவார்கள்.

ஆனால் இந்த முறை, தொடர்ந்து பெய்து வரும் மழையையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் வந்துகொண்டே உள்ளனர். திருவிதாங்கூர் தேவஸ்தானம் போர்டு சார்பில் எத்தனையோ நடவடிக்கை எடுக்கப்பட்டும், கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு பக்தர்கள் கூட்டம் அதிகரித்திருப்பது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

 

 

Advertisement
Next Article