”கூட்டணியில் அடுத்த கட்ட நடவடிக்கை....”- தவாக வேல்முருகன் பரபரப்பு பேச்சு..!
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் கடலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மொத்தம் 22 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டள்ளன. இதனை தொடர்ந்து கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் பேசினார்.
அவர் பேசியது,“நான் சட்டமன்றத்தில் பேசும் பேச்சுகளில் வெறும் 5 நிமிடம் மட்டுமே வெளியிடப்படுகிறது. அதற்குக் கூட இந்த அரசு பயப்படுகிறது. நான் கேட்கும் கேள்விகளுக்கு அமைச்சர் உட்பட யாரும் பதிலளிக்க முடியவில்லை. ‘ஹேப்பி ஸ்டீரிட்’ என்ற பெயரில் அரைகுறை ஆடை கலாச்சாரத்தை நடத்தக்கூடாது என வாய்மொழி உத்தரவு வந்ததற்கு காரணம் நான்தான்” என்றார்.
மேலும் பேசிய அவர் கடந்த 5 ஆண்டுகளில் நான் சட்டமன்றத்தில் பேசியதையும் சாதித்ததையும் மக்களிடம் எடுத்துச் சென்றாலே, தமிழக வாழ்வுரிமைக் கட்சி தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக மாறும்,” எனவும் தெரிவித்தார். தொடர்ந்து பேசுகையில், பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும்; இல்லையெனில் சுங்கச்சாவடி வழக்கைப் போல இன்னொரு வழக்கை சந்திக்க தயாராகுங்கள், எனவும் அவர் எச்சரித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,
”தமிழீழ படுகொலை தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்த மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும். சாதிவாரி கணக்கெடுப்பு உடனடியாக நடத்தப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் இடம்பெற்றுள்ளன. இவை நிறைவேற்றப்படாவிட்டால் கூட்டணியில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வேல்முருகன் எச்சரித்தார்.
மேலும் “சிறிய கட்சியாக தொடங்கிய எங்கள் கட்சி இன்று தவிர்க்க முடியாத அரசியல் சக்தியாக வளர்ந்துள்ளது. வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் எங்கள் இடங்களும் அதிகரிக்கும்,” என்றார்.
தொடர்ந்து கரூர் விவகாரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சென்னையில் அழைத்து சந்திப்பது ஒரு கட்சி தலைவருக்கு சரியான அணுகுமுறையும் அல்ல..அழகும் அல்ல என்றும் அவர் கூறினார்.