சனாதன வாரியம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியதாக பரவும் செய்தி - உண்மை என்ன?
This news Fact Checked by ‘Vishvas News’
டெல்லியில் நடைபெற்ற தர்ம சன்சத் கூட்டத்தில் சனாதன வாரியம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளதாக சமூக வலைதளங்களில் செய்தி ஒன்று வைரலானது. இதுகுறித்து உண்மைத் தன்மையை விரிவாக காணலாம்.
சமீபத்தில் டெல்லியில் நடந்த தர்ம சன்சத் கூட்டத்தில் சனாதன தர்ம வாரியம் அமைப்பதற்கான கோரிக்கை எழுப்பப்பட்டதை அடுத்து மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக சமூக வலைதளங்களில் பதிவு ஒன்று வைரலானது. இந்த செய்தி குறித்து விஸ்வாஸ் நியூஸ் ஆய்வு செய்தபோது, அத்தகைய வாரியம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளிக்கவில்லை என்பது தெரிய வந்தது.
வைரல் பதிவு :
சமூக வலைதள பயனரான ஜிதேந்திரராஜ்பார் நவம்பர் 19 அன்று சமூக வலைதளங்களில் பதிவு ஒன்றை எழுதினார். அதில் " சனாதன் வாரியம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மகிழ்ச்சியாக இருப்பவர்கள் மட்டும் ஜெய் ஸ்ரீராம் சொல்லுங்கள்." என எழுதப்பட்டிருந்தது. இப்பதிவை பலர் சமூக வலைதளங்களின் மூலம் பகிர்ந்தனர்.
உண்மை சரிபார்ப்பு :
வைரலான பதிவின் உண்மைத் தன்மையை அறிய முதலில் இந்த தலைப்பை Google இல் முக்கிய வார்த்தைகளைப் பயன்படுத்தி தேடினோம், ஆனால் வைரல் பதிவை உறுதிப்படுத்தும் விதமாக எந்த ஊடக அறிக்கையும் கிடைக்கவில்லை. மேலும் தேடியபோது, நவம்பர் 17ஆம் தேதி டைனிக் பாஸ்கரின் இணையதளத்தில் வெளியான செய்தி கிடைத்தது . இதன்படி துவாரகா பீடத்தைச் சேர்ந்த சங்கராச்சாரியார் சதானந்த சரஸ்வதி உட்பட நாடு முழுவதிலும் இருந்து 50 முதல் 60 துறவிகள், சாத்விகள் மற்றும் ஆன்மிக சொற்பொழிவாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து டெல்லியில் இந்து சமய விழா ஒன்றை நடத்தினர். இந்த நிகழ்ச்சியில் வக்பு வாரியம் போன்று சனாதன் வாரியம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியை தேவகினந்தன் ஏற்பாடு செய்தார்.
நவம்பர் 16 அன்று டைனிக் ஜாக்ரனின் இணையதளத்திலும் இது தொடர்பான செய்திகளைக் காணலாம் . இதிலும் சனாதன் வாரியம் அமைக்க வேண்டும் என்ற எழுத்துப்பூர்வ கோரிக்கை வைக்கப்பட்டது. இதேபோல நவம்பர் 19 ஆம் தேதி அம்ரித் விசாரின் இணையதளத்தில் வெளியிடப்பட்ட செய்தியின்படி , தேவ்கினந்தன் தாக்கூருக்குப் பிறகு, திருநங்கை ஆன்மிக சொற்பொழிவாளரான ஹிமாங்கி சாகியும் சனாதன் வாரியம் அமைக்க மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
நவம்பர் 19 அன்று லைவ் ஹிந்துஸ்தான் இணையதளத்தில் வெளியிடப்பட்ட
செய்தியில் , அகில பாரதிய அகாரா பரிஷத்தின் தலைவரும், மானசா தேவி அறக்கட்டளையின் தலைவருமான மஹந்த் ரவீந்திர புரி, மகாகும்பத்தில் சனாதன் வாரியத்தை முன்மொழிந்ததாக செய்திகளை வெளியிட்டது. மகாகும்பத்தில் சனாதன் வாரியம் அமைப்பதற்கான முன்மொழிவு நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டதாகவும், நாடு முழுவதும் உள்ள மடங்கள் மற்றும் கோவில்களின் அனைத்து ஏற்பாடுகளையும் இந்த வாரியம் கவனிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இது குறித்து டைனிக் ஜாக்ரன் பத்திரிகையில் சிறப்பு நிருபர் நீலு ரஞ்சனிடம் பேசினோம். ஆன்மிக நிகழ்ச்சியில் சனாதன் வாரியம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டதாகவும், ஆனால் மத்திய அரசு இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை என்றும் அவர் விளக்கினார். இதன்படி சனாதன் வாரியம் அமைக்கப்பட்டது என்ற தவறான கூற்றைப் பதிவிட்ட த்ரெட் பயனரின் சுயவிவரத்தை ஸ்கேன் செய்தோம் . அவர் ஒரு குறிப்பிட்ட அரசியல் சிந்தாந்தத்தை கொண்டவராக அறிய முடிந்தது.
முடிவு:
தர்ம சன்சத் கூட்டத்தில் சனாதன் வாரியம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது உண்மைதான் . ஆனால், சனாதன் வாரியம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளிக்கவில்லை என்பது இதன் மூலம் நிரூபணமாகிறது.
Note : This story was originally published by ‘Vishvas News’ and translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.