”கரூரிலிருந்து வரும் செய்திகள் கவலையளிக்கின்றன” - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வருத்தம்..!
தவெக தலைவர் விஜயின் கரூர் பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 10க்கும் மேற்பட்டோர் மயக்கம் அடைந்து கீழே விழுந்தனர். இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் மீட்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.
இதனை தொடர்ந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன், அன்பில் மகேஷ் மற்றும் செந்தில் பாலாஜி ஆகியோரை உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல உத்தரவு பிறப்பித்து உள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில்,
”கரூரிலிருந்து வரும் செய்திகள் கவலையளிக்கின்றன. கூட்ட நெரிசலில் சிக்கி மயக்கமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்குத் தேவையான உடனடி சிகிச்சைகளை அளித்திடும்படி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் அவர்களையும் - மாவட்ட ஆட்சியரையும் தொடர்புகொண்டு அறிவுறுத்தியுள்ளேன்.
மேலும் அருகிலுள்ள திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் அன்பில் மகேஷிடமும் போர்க்கால அடிப்படையில் தேவையான உதவியினைச் செய்து தரும்படி உத்தரவிட்டிருக்கிறேன். அங்கு, விரைவில் நிலைமையைச் சீராக்கும் நடவடிக்கைகைளை மேற்கொள்ள ADGP-யிடமும் பேசியிருக்கிறேன். பொதுமக்கள் மருத்துவர்களுக்கும் காவல் துறைக்கும் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.