புதுமாப்பிளையை ஏமாற்றி விட்டு புரோக்கர் கும்பலுடன் ஓட்டம் பிடித்த புதுப்பெண்!
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அடுத்த ஜேடர்பாளையம் அருகே உள்ள வடகரையாத்தூர் பகுதியை சேர்ந்தவர் சிவசண்முகம் (வயது 35), இவர் புரோக்கர்கள் மூலம் விருதுநகர் பகுதியை சேர்ந்த தீபா என்ற பெண்ணை கடந்த 7 ம் தேதி இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.
இந்த திருமணத்துக்காக சிவசண்முகம் புதுப்பெண் தீபாவுக்கு வரதட்சணையாக ஒரு லட்சமும், மேலும் 9 பவுனில் தாலி கொடியும் அணிவித்தார், மேலும் புரோக்கர்கள் 6 பேருக்கு ரூபாய் ஒரு லட்சம் ரொக்கப்பணம் கொடுத்தார்.
இந்த நிலையில் திருமணம் ஆன இரண்டாவது நாள் சிவசண்முகம் தனது புது மனைவி தீபாவை திடுமல் ராசாம்பாளையத்தில் உள்ள தனது சகோதரி வீட்டிற்கு விருந்துக்கு அழைத்து சென்ற நிலையில், அங்கே அவர்கள் இரவு தங்கினார்கள். மறுநாள் அதிகாலையில் பார்த்தபோது தீபா மாயமாகி இருந்தது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த புது மாப்பிள்ளை சிவசண்முகம் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த நிலையில் மனமுடைந்த அவர் அக்கா வீட்டில் தூக்குமாட்டி உயிரை மாய்த்துக் கொண்டார். இந்நிலையில் நகை, பணத்துடன் ஓட்டம் பிடித்த புதுப்பெண் மற்றும் புரோக்கர்கள் தலைமறைவாகிவிட்டனர்.
இதுகுறித்து சிவசண்முகத்தின் சகோதரி கொடுத்த புகாரின் பேரில் நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய புதுப்பெண் மற்றும் புரோக்கர்களை பிடிக்க நாமக்கல் மாவட்ட போலீஸ் எஸ்.பி ராஜேஷ்கண்ணன் உத்தரவின் பேரில் பரமத்தி வேலூர் டிஎஸ்பி சங்கீதா பரிந்துரையின் பேரில் தனிப் படைகள் அமைக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து தனிப்படையினர் மதுரை மாவட்டத்தில் பதுங்கி இருந்த சிவசண்முகம் மனைவி ஜோதிலெட்சுமி என்ற பெண் தனது பெயரை தீபா என மாற்றி திருமணம் செய்தது தெரிய வந்தது.
பின்பு தலைமறைவான ஜோதிலெட்சுமி புரோக்கர்கள் தமிழ்ச்செல்வி, கஸ்தூரிபாண்டி, வேல்முருகன், முத்துலெட்சுமி, சங்கர் ஆகியோரை தனிப்படை போலீசார் மற்றும் நல்லூர் போலீசார் கைது செய்து நல்லூருக்கு அழைத்து வந்து வேறு யாரேனும் ஏமாந்தார்களா எனவும் இந்த கும்பலிடம் தொடர் விசாரணையில் ஈடுப்பட்டு வருகின்றனர்.