“கல்வியில் அரசியல் செய்வது நீங்களா? நாங்களா?” - தர்மேந்திர பிரதானுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி!
கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தும், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். அதில் 44,690 பயனாளிகளுக்கு ரூ.387 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கியபின் உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர்,
“திமுக அரசு அமையும் போதெல்லாம் கடலூர் மாவட்டத்திற்கு ஏராளமான திட்டங்கள் செய்யப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் 77 மருத்துவ உட்கட்டமைப்பு செய்து தரப்பட்டுள்ளது.
அதன் தொடர்ச்சியாக இந்த விழாவின் மூலம் கடலூருக்கு பத்து அறிவிப்புகளை அறிவிக்க விரும்புகிறேன்.
1. திட்டக்குடி மற்றும் விருத்தாசலம் பகுதியில் உள்ள வேளாண் மக்கள் பயன் பெறும் வகையில் வெலிங்டன் எதிரில் கரைகளை வளப்படுத்துவது மற்றும் வாய்க்கால்களை மேம்பாட்டு பணிகள் 130 ரூபாய் கோடி செலவில் மேற்கொள்ளப்படும்.
2. மஞ்சக்குப்பம் மைதானம் மற்றும் அதன் சுற்றியிருக்கும் பகுதிகள் 35 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பொதுமக்கள் பயன்படுத்தகூடிய வகையில் மேம்படுத்தப்படும்.
3. பண்ருட்டி தொகுதியில் 15 கோடி ரூபாய் செலவில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்கப்படும்.
4. புவனகிரி மற்றும் சிதம்பரம் பகுதி மக்களுக்கு பயனளிக்கும் வகையில் முட்லூரில் சேத்தியாத்தோப்பு இரண்டு வழச்சாலை நான்கு வழிச்சாலையாக 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.
5. கெடிலம் ஆற்றங்கரையில் 36 கோடி செலவில் வெள்ளத் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.
6. திருவந்திபுரம் முதல் எம்.புதூர் வரை உள்ள சாலை 7 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.
7. குறிஞ்சிப்பாடி பகுதியில் புதிய வட்டாட்சியர் அலுவலகம் 6 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்.
8. வீராணம் ஏரி 63 கோடி ரூபாய் மதிப்பில் மேம்படுத்தப்படும்.
9. கடலூர் வட்டத்தில் பருவமழை வெள்ள பாதிப்பை தடுக்க தென்பெண்ணை ஆற்றில் 57 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வெள்ளத் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.
10. மாணவர் ராஜேந்திரன் நினைவிடம் புதுப்பிக்கப்படும்.
திட்டங்கள் மட்டுமல்ல தனிமனிதருக்கும் தேவையான நன்மைகளை செய்கிற அரசாக திமுக உள்ளது. என் ஒரே இலக்கு மக்கள் தான். லட்சியவாதிக்கு கொள்கை மட்டும் தான் தெரிய வேண்டும். வெட்டிபேச்சுக்கு நான் கவனம் செலுத்துவதில்லை. சொன்னதை மட்டுமல்ல சொல்லாததையும் திமுக அரசு செய்து வருகின்றது. பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு பார்த்து பார்த்து திட்டங்களை நிறைவேற்றுகின்றோம்.
மாரடைப்பால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்க இதயம் காப்போம் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றோம். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை திட்டங்களை செயல்படுத்தி வருகின்றோம். அதனால் தான் நெஞ்சை நிமிர்த்தி சொல்கிறோம். மத்திய அரசு மாநில வளர்ச்சியை தடுக்கிறது, நிதி தரப்படவில்லை, திட்டங்களை நிறைவேற்றவில்லை.
புதிய புதிய சட்டங்களை இயற்றுகின்றனர். நம் பிள்ளைகள் படிக்க கூடாது, பள்ளி செல்லக்கூடாது என புதிய கல்விக் கொள்கையை கொண்டு வருகின்றனர். சமூக நீதியை சிதைக்க தேசிய கல்விக்கொள்கை கொண்டு வரப்படுகிறது. தமிழ்நாடு மற்றும் தமிழ்நாட்டு மக்கள் முன்னேற்றத்தை தடுக்க பார்க்கின்றனர்.
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கல்வியில் அரசியல் செய்ய வேண்டாம் என்கிறார். கல்வியில் அரசியல் செய்வது நீங்களா? நாங்களா? பிளாக் மெயில் செய்வது, இந்தியை திணிப்பது அரசியல் இல்லையா? மக்கள் நலத்திட்டங்களுக்கு நிதி செலவிடுவது நாங்கள். மதவெறி மற்றும் சமஸ்கிருதம் வளர்ச்சிக்கு நிதி செலவிடுவது நீங்கள். கொடுத்து பெறுவது தான் கூட்டாட்சி தத்துவம். இதை புரிந்து கொள்ளாதவர்கள் மிகப்பெரும் சாபக்கேடு.
கல்விக் கொள்கை மூலமாக முலாம் பூசுகின்றனர். எங்கள் மொழியை வளர்க்க எங்களுக்கு தெரியும் நீங்கள் வந்து தேன் கூட்டில் கை விடாதீர்கள். இது என் கடுமையான எச்சரிக்கை. நான் இருக்கும் வரைக்கும், திமுக இருக்கும் வரை இந்த மண்ணிற்கு வரமுடியாது. தடைகள் எந்த பக்கம் வந்தாலும் அதை உடைப்போம்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.