Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“சங்கம்விடுதி ஊராட்சி குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலந்தது கண்டிக்கத்தக்கது” - ராமதாஸ் கண்டனம்!

02:05 PM Apr 26, 2024 IST | Web Editor
Advertisement

“சங்கம்விடுதி ஊராட்சி குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலந்தது கண்டிக்கத்தக்கது” என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

Advertisement

புதுக்கோட்டை மாவட்டம் சங்கம்விடுதி ஊராட்சி குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இந்நிலையில் இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.  அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது;

“புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை ஒன்றியம் சங்கம்விடுதி ஊராட்சிக்குட்பட்ட குருவண்டான் தெருவில் பட்டியலின மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. பொதுமக்கள் குடிப்பதற்கான குடிநீர்த் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டது மனிதநேயமற்றது மட்டுமின்றி மனிதத் தன்மையற்ற செயலாகும்.  இது கடுமையாக கண்டிக்கத்தக்கது.

குருவண்டான் தெரு குடிநீர்த் தொட்டியில் சில நாட்களுக்கு முன்பாகவே மாட்டுச்சாணம் கலக்கப்பட்டிருக்கக் கூடும் என்று தெரியவந்துள்ளது.  அத்தொட்டியிலிருந்து விநியோகிக்கப்பட்ட குடிநீரை குடித்த குழந்தைகள் உள்ளிட்ட பலருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை ஆய்வு செய்த போது தான் இந்த உண்மை வெளிவந்திருக்கிறது.  மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்கான குடிநீர்த் தொட்டியில் இது போன்ற மிருகத்தனமான செயல்கள் நடப்பதைக் கண்காணிக்க வேண்டியதும்,  ஒவ்வொரு நாளும் குடிநீர் மக்கள் பயன்படுத்தத் தக்க வகையில் பாதுகாப்பாக இருக்கிறதா? என்பதை ஆய்வு செய்ய வேண்டியதும் அரசின் பணி.  ஆனால், இந்த இரு கடமைகளிலும் திமுக அரசு தோல்வியடைந்து விட்டது.

தமிழ்நாட்டில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக குடிநீர் தொட்டிகளில் மலம்,  மாட்டுச்சாணம் போன்றவற்றை கலக்கும் நிகழ்வுகள் அதிகரித்து விட்டன.  அதிலும் குறிப்பாக பள்ளிகளிலும்,  பட்டியலின மக்கள் வாழும் பகுதிகளிலும் இத்தகைய நிகழ்வுகள் தொடர்வது மிகுந்த கவலையும்,  வேதனையும் அளிக்கிறது.  பட்டியலின மக்களுக்கு எதிராக இத்தகையக் கொடுமைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் அவற்றைத் தடுக்க தமிழக அரசு தவறி விட்டது.

வேங்கைவயல் குடிநீர்த் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட கொடூரம் நிகழ்ந்து இன்றுடன் 17 மாதங்களாகி விட்டன.  ஆனால்,  அதில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது தான் இத்தகையக் கொடுமைகள் மீண்டும்,  மீண்டும் நிகழ்வதற்கு காரணம் ஆகும்.  வேங்கைவயல் விவகாரத்தில் தமிழக அரசு இனியும் உறங்கிக் கொண்டிருக்காமல் குற்றவாளிகளை அடையாளம் கண்டு,  கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும்.

குருவண்டான் தெரு குடிநீர்த் தொட்டியில் சாணம் கலக்கப்பட்ட நிகழ்வும் வேங்கைவயல் நிகழ்வு எந்த அளவுக்கு கொடூரமானதோ,  அதே அளவுக்கு கொடூரமானது.  அனைவரும் மனிதர்கள் தான்.  பிடிக்காதவர்களை பழிவாங்குவதற்காக இத்தகைய செயல்களில் ஈடுபட்டவர்கள் மன்னிக்கப்படுவதற்கு தகுதியற்றவர்கள்.  இந்த நிகழ்வின் பின்னணியில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத்தர தமிழக அரசும்,  காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்”

இவ்வாறு அந்த அறிக்கையில் டாக்டர் ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.

Tags :
cow dungdrinking waterPMKPudukottaiRamadossSengamviduthy
Advertisement
Next Article