2040-ம் ஆண்டிற்குள் மனிதனை நிலவிற்கு அனுப்பும் பணி நிறைவுபெறும்- இஸ்ரோ விஞ்ஞானி வீரமுத்துவேல் பேட்டி!
2040-ம் ஆண்டிற்குள் மனிதனை நிலவிற்கு அனுப்பும் பணி நிறைவுபெறும் என சந்திரயான் 3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேல் தெரிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள தனியார் கல்லூரியில் விண்வெளியில் இந்தியா என்ற தலைப்பில் கருத்தரங்க நடைபெற்றது. அரசு பள்ளி மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் நடந்த இந்த கருத்தரங்கில் கலந்து கொண்ட சந்திரயான் 3 திட்ட இயக்குனர் வீர முத்துவேல் கூறியதாவது,
“ஊரகப் பகுதிகளில் உள்ள அரசு மற்று ஊரக பள்ளி மாணவர்களை ஊக்கமளிக்கும் வகையிலும், விண்வெளி மற்றும் சந்திரயான் திட்டங்கள் குறித்து அறிந்து கொள்ளும் வகையிலும் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும் உதகையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது
இந்தியா சார்பில் விண்வெளியில் ஆராய்ச்சி மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். 2040-ம் ஆண்டிற்குள் மனிதனை நிலவிற்கு அனுப்பும் பணி நிறைவேற்றப்படும். சந்திரயான் 3 செயற்கைக்கோள் லேண்டர் மற்றும் ரோவர் அடங்கியது. இதன் ஆயுட்காலம் ஒரு லூனார் நாளாகும். தற்போது அதன் ஆயுட்காலம் முடிவடைந்து விட்டது. அந்த செயற்கைக்கோள் எந்த நோக்கத்திற்காக விண்ணிற்கு செலுத்தப்பட்டதோ அந்த நோக்கம் வெற்றி அடைந்துள்ளது” இவ்வாறு தெரிவித்தார்.