சென்னையில் இறந்த குழந்தையின் உடலை அட்டை பெட்டியில் வைத்து கொடுத்த விவகாரம்! பிணவறை உதவியாளர் பணியிடை நீக்கம்!
சென்னை கீழ்ப்பாக்கத்தில் இறந்த குழந்தையின் உடலை அட்டை பெட்டியில் வைத்து
கொடுத்த விவகாரத்தில் ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கன்னிகாபுரத்தைச் சேர்ந்த மசூத்-சௌமியா தம்பதிக்கு கடந்த டிசம்பர்
5ஆம் தேதி குழந்தை இறந்த நிலையில் பிறந்துள்ளது. இந்த குழந்தையை
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் உள்ள பிணவறையில் மசூத் ஒப்படைத்துள்ளார்.
இந்நிலையில் டிசம்பர் 10ஆம் தேதி குழந்தையின் உடலை அடக்கம் செய்வதற்காக
அட்டைப்பெட்டியில் வைத்து மசூதிடம் மருத்துவமனை நிர்வாகம் ஒப்படைத்துள்ளது.
மேலும் 2500 ரூபாய் லஞ்சம் கேட்டதாகவும் புகார் எழுந்தது. இந்த செய்தியானது
பொதுமக்களிடம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இது குறித்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை வளாகத்தில் செய்தியாளர்களை
சந்தித்த தமிழ்நாடு மருத்துவ கல்வி இயக்குநர் சங்குமணி கூறியதாவது:
குழந்தை இறந்தே பிறந்த நிலையில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு
வரப்பட்டது. அந்த குழந்தையை அட்டை பெட்டியில் வைத்து கொடுத்தது தொடர்பாக
பன்னீர்செல்வம் என்னும் பிணவறை உதவியாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க சுகாதாரத்துறை அமைச்சர் வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளார். தற்போது அந்த ஊழியர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேல் அதிகாரிகளுக்கும் இது தொடர்பாக மெமோ வழங்கப்பட்டுள்ளது.
2500 ரூபாய் லஞ்சம் கேட்கப்பட்டது என்று கூறுவது உண்மை இல்லை. இறந்த உடலை ஒப்படைப்பதற்கு என்று சில வழிமுறைகள் உள்ளன. அது மீறப்பட்டுள்ளதால் பிணவறை உதவியாளர் பன்னீர்செல்வம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு தமிழ்நாடு மருத்துவ கல்வி இயக்குநர் சங்குமணி கூறியுள்ளார்.