இன்றுடன் நிறைவு பெறுகிறது மகா கும்பமேளா... பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!
உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகளும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த நிகழ்வு ஜனவரி 12ஆம் தேதி கோலகலமாக தொடங்கியது. இந்த நிகழ்வில் சந்நியாசிகள், துறவிகள், சாதுக்கள், சாத்விகள், கல்பவாசிகள், யாத்ரீகர்களை பொது மக்கள் உட்பட பலர் கலந்துகொண்டு திரிவேணி சங்கமத்தில் நீராடி வருகின்றனர்.
கும்பமேளா நடைபெறும் காலங்களில் திரிவேணி சங்கமத்தில் நீராடுவதை பலரும் புனிதமாக கருதுகின்றனர். கும்பமேளா நிகழ்ச்சியில் உலகம் முழுவதும் இருந்து 63 கோடிக்கும் அதிகமான மக்கள் கலந்துகொண்டு திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியதாக உத்தர பிரதேச அரசு அறிவித்துள்ளது.
இதுதவிர உத்தரபிரதேச, சத்தீஸ்கர் உள்பட பல்வேறு மாநில சிறைக்கைதிகளுக்கு புனிதநீர் அனுப்பி வைக்கப்பட்டது. அவர்கள் சிறை வளாகத்தில் உள்ள தொட்டிகளில் ஊற்றப்பட்ட புனித நீரில் நீராடினர். கடந்த 44 நாட்களாக நடைபெற்று வந்த மகா கும்பமேளா, 45வது நாளான மகா சிவராத்திரி தினமான இன்றுடன் (பிப்.26) நிறைவு பெறுகிறது.
மகா கும்பமேளா நிறைவு பெறுவதையொட்டி, நிறைவுநாள் நிகழ்ச்சி இன்று மிகப் பிரமாண்டமாக நடைபெறுகிறது. கங்கைக்கரையில் சிறப்பு வழிபாடுகள், பூஜைகள் நடைபெறுகிறது. மகா சிவராத்திரி மற்றும் மகா கும்பமேளா நிறைவுநாளான இன்று ஏராளமான பக்தர்கள் பிரயாக்ராஜில் குவிந்து வருகின்றனர். லட்சக்கணக்கானோர் பிரயாக்ராஜிக்கு வருகை தருவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுவதால், முன் எச்சரிக்கை நடவடிக்கைகளில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
மேலும் இன்று மகா சிவராத்திரி விழாவையொட்டி பிரயாக்ராஜ் முழுவதும் வாகனங்கள் செல்ல தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்காக மருத்துவர்கள், காவலர்கள், நிர்வாக அதிகாரிகள் எவ்வித கட்டுப்பாடும் இன்றி இயங்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பிரயாக்ராஜ் பகுதியில் எந்த இடத்தில் மக்கள் வருகின்றனரோ, அதன் அருகிலேயே நீராட வேண்டும் என்று கட்டுப்பாடுகளை விதித்து உள்ளனர்.