கோயம்பேட்டில் லாரி கவிழ்ந்து விபத்து - ஓட்டுநர் உயிரிழப்பு!
கோயம்பேட்டில் லாரி கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி அடுத்த சங்கராபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர்(38). இவர் குன்றத்தூர் அடுத்த எருமையூர் பகுதியில் உள்ள கிரஷரில் லாரி ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், சங்கர் நேற்று இரவு வழக்கம்போல் லாரியில் ஜல்லி லோடு ஏற்றி கொண்டு கோயம்பேடு பகுதியில் கட்டடபணி நடைபெறும் இடத்திற்கு சென்றார்.
கட்டுமான பணி நடைபெறும் இடத்திற்கு சென்ற அவர் வளாகத்திற்குள் ஜல்லியை கொட்டுவதற்காக லாரியை ரிவர்ஸ் எடுத்தார். அப்போது அங்கிருந்த கழிவுநீர் தொட்டியின் மீது லாரி ஏரியதில் எதிர்பாராத விதமாக அந்த தொட்டியின் மூடி உடைந்தது. கழிவுநீர் தொட்டியின் மூடி உடைந்து லாரியின் பின்பக்க சக்கரம் அதற்குள் சிக்கிக் கொண்டதில், லாரி கவிழும் சூழல் உருவானது. இதனை அறிந்த லாரி ஓட்டுநர் சங்கர் லாரியிலிருந்து குதித்து தப்ப முயன்றார்.
சங்கர் லாரியில் இருந்து குதித்த அடுத்த நொடியே லாரி அவர் மீது கவிழ்ந்தது. இதில் லாரி ஓட்டுநர் சங்கர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அருகில் இருந்தவர்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உயிரிழந்த சங்கரின் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கோயம்பேடு போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.