புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் நீர்க்கசிவு - மக்களவைச் செயலகம் விளக்கம்!
புதிய நாடாளுமன்றக் கட்டட லாபியில் ஏற்பட்ட தண்ணீர் கசிவு தடுத்து நிறுத்தப்பட்டதாக மக்களவைச் செயலகம் தெரிவித்துள்ளது.
டெல்லியில் நாடாளுமன்றத்தின் புதிய கட்டடம் கடந்தாண்டு மே மாதம் பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்டது. மிக நவீன தொழில்நுட்பத்துடன் இந்த கட்டடம் கட்டப்பட்டிருந்தது. ஆனால் டெல்லியில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக, பழைய நாடாளுமன்றக் கட்டடமான சம்விதான் சதனின் முதல் நுழைவு வாயிலுக்கும் (கேட் எண் 1) புதிய நாடாளுமன்றக் கட்டடத்தின் முக்கிய நுழைவு வாயிலான ’மஹர் துவார்’ ருக்கும் இடைப்பட்ட பகுதியில் தண்ணீர் தேங்கியது.
மேலும், மக்களவையின் லாபியிலும் மேற் கூரையிலிருந்து தண்ணீர் வடிய அதை பிளாஸ்டிக் வாளியை வைத்து பிடிக்கும் காட்சி ஏழைகளின் குடிசைகளை நினைவு கூர்ந்தது. இதை முன்னிட்டு மக்களவை காங்கிரஸ் உறுப்பினர் மாணிக்கம் தாக்கூர் உள்ளிட்டவர்கள் அவையில் ஒத்திவைப்பு தீர்மானத்திற்கு நோட்டீஸ் அளித்தனர்.
அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :
புதிய நாடாளுமன்றக் கட்டடத்திற்குள் நுழையும் போது, நாடாளுமன்ற வளாகத்திற்குள் இந்தியக் குடியரசுத் தலைவர் பயன்படுத்திய பாதையில் (லாபி), தண்ணீர் கசிவு ஏற்பட்டுதை காண முடிந்தது. இந்தக் கட்டடம் கட்டி முடிக்கப்பட்ட ஒரு ஆண்டிற்குள் சீதேஷ்ண நிலையை தாங்கும் திறன்களில் (மீள்தன்மையில்) சிக்கல்களை எடுத்துக் காட்டுகிறது.
இதனால் தண்ணீா் கசிவுக்கான காரணங்கள், வடிவமைப்பு, உபயோகப் படுத்தப்பட்ட பொருட்களை மதிப்பீடு செய்வது, தேவையான பழுதுபார்ப்புகளுக்கு பரிந்துரை செய்து தீர்வு காண அனைத்து கட்சி எம்.பி.க்கள் உள்ளிட்ட சிறப்பு குழுவை அமைக்கவேண்டும். கட்டடத்தை முழுமையாக ஆய்வு செய்து வெளிப்படையாக அறிக்கை வைக்கப்பட வேண்டும்" இவ்வாறு அந்த நோட்டீஸில் தெரிவித்துள்ளனர்.
இதையும் படியுங்கள் : ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர திருவிழா – சுவாமி தங்க வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா!
இதை முன்னிட்டு மக்களவைச் செயலக அறிக்கை வெளியிட்டது. அதில் குறிப்பிட்டுள்ளதாவது :
"புதிய நாடாளுமன்றம், பசுமைக் கட்டட கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டது. கட்டடத்தின் பல்வேறு பகுதிகளிலும், லாபி உள்ளிட் பல இடங்களில் கண்ணாடி குவிமாடங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் ஏராளமாக இயற்கை ஒளியைப் பெற முடிகிறது. கடந்த ஜூலை 31ம் தேதி பெய்த கனமழையின் போது, கட்டடத்தின் முகப்பில், கண்ணாடி குவிமாடங்களில் சேதமடைந்து, லாபியில் சிறிய நீர் கசிவை ஏற்படுத்தியது.
இந்த சிக்கல்களை சரியான நேரத்தில் கண்டறியப்பட்டது. சரிசெய்யப்படுவதற்கான நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்பட்டுவிட்டன. அதன்பின், தண்ணீர் கசிவு ஏற்படவில்லை. மேலும், நாடாளுமன்ற வளாகத்தைச் சுற்றிலும், குறிப்பாக புதிய நாடாளுமன்றத்தின் ’மஹர் துவார்’ அருகில் தண்ணீர் தேங்கிய காணொலிகள் வைரலாகியது. மஹர் துவார் எதிரே தேங்கிய தண்ணீர் வேகமாக வெளியேறியதால் பிரச்னை இல்லை"
இவ்வாறு மக்களவைச் செயலகம் தெரிவித்துள்ளது.