“கூட்டுக்குழு தலைவருக்கு அலைபேசி அழைப்பு வந்தது... அதன் பின்னரே சஸ்பெண்ட் செய்யப்பட்டோம்” - ஆ.ராசா!
வக்ஃபு வாரிய நாடாளுமன்ற கூட்டுக்குழுவிலிருந்து எதிர்கட்சி உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக, திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது;
வக்ஃபு வாரிய மசோதா கூட்டுக்குழுவுக்கு அனுப்பப்பட்டது. அதன்பின்னர் ஒவ்வொரு அமைப்பு, மாநிலம் வாரியாக கருத்து கேட்பு நடத்தப்பட்டது. அந்த கருத்து கேட்பு கூட்டம் முடிவடைந்த நிலையில், விரைந்து 48 மணி நேரத்தில் அனைத்து சரத்து தொடர்பாக கருத்துகளை தெரிவிக்க வேண்டும் என கூறப்பட்டது.
ஆனால் இத்தனை குறுகிய காலத்தில் இவ்வாறு அழுத்தம் கொடுக்கக்கூடாது என வலியுறுத்தினோம். இருப்பினும் இஸ்லாமியர்கள் நலன் காக்க இந்த விவகாரத்தில் அனைத்து சரத்துக்களையும் ஒவ்வொன்றாக விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தினோம். முதலில் அந்த கோரிக்கை ஏற்கப்பட்டது.
ஆனால் தற்போது இன்று கூட்டுக்குழு கூட்டம் நடைபெறும் நிலையில், இரவோடு இரவாக பொருளடக்கம் மாற்றப்பட்டது. குறிப்பாக சரத்து வாரியாக விவாதம் நடத்த முடியாது என எங்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டது. இதை கடுமையாக எதிர்த்தோம். எப்படி பொருளடக்கத்தை மாற்றலாம் என கேள்வி எழுப்பினோம். அவ்வாறு தான் செய்வோம் என கூட்டுக்குழு தலைவர் தெரிவித்தார்.
மேலும் இன்றைய கூட்டத்தின்போது எதிர்ப்பு தெரிவித்தபோது, கூட்டுக்குழு தலைவருக்கு ஒரு அலைபேசி அழைப்பு வந்தது. அதனடிப்படையில் எங்களை சஸ்பெண்ட் செய்தார். வக்ஃபு வாரிய மசோதா தொடர்பான அறிக்கையை வரும் 30ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வதாக கூட்டு குழு தலைவர் பேட்டி அளித்துள்ளார்.
எனவே டெல்லி தேர்தலுக்காக வக்ஃபு மசோதாவை பாஜக பயன்படுத்த இருப்பதாக அச்சம் எழுந்துள்ளது. மேலும் வக்ஃபு வாரிய மசோதாவை இறுதி செய்ய ஏப்ரல் வரை கால அவகாசம் உள்ள நிலையில், அவசரகதியில் அறிக்கையை முடித்து குடியரசுத் தலைவர் உரையில் கூட மசோதா தாக்கல் செய்து நிறைவேற்றப்படும் என்று விளம்பரம் செய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. அதற்காகவே அவசரகதியில் கூட்டத்தை நடத்தி வருகிறார்கள்.
மதரீதியாக மக்களை பிளவுபடுத்தி தேர்தல் ஆதாயம் பெற பாஜக முயற்சிப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது” என்று ஆ.ராசா குற்றம் சாட்டியுள்ளார்.