Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

குடியரசுத் தலைவருக்கு தன்னிச்சையாக கடிதம்: பார் கவுன்சில் தலைவருக்கு எதிராக தீர்மானம்!

10:20 AM Mar 13, 2024 IST | Web Editor
Advertisement

தேர்தல் பத்திர விவகாரத்தில் உச்ச நீதிமன்ற நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தாமல் ஒத்தி வைக்கக் கோரி குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதிய உச்சநீதிமன்ற பார் கவுன்சில் தலைவர் ஆதிஷ் அகர்வாலாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

Advertisement

தேர்தல் பத்திரம் தொடர்பான விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் வழங்க உச்சநீதிமன்றம் எஸ்.பி.ஐ வங்கிக்கு உத்தரவிட்டிருந்தது.  இந்நிலையில் தேர்தல் பத்திர விவரங்களை  வழங்க கூடுதல் கால அவகாசம் கோரி உச்சநீதிமன்றத்தில் எஸ்.பி.ஐ. வங்கி மனு தாக்கல் செய்தது.  கூடுதல் கால அவகாசம் கோரி உச்சநீதிமன்றத்தில் எஸ்.பி.ஐ. வங்கி தாக்கல் செய்த மனு மீதான விசாரணை,  தலைமை நீதிபதி சந்திரசூட்,  நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா,  பி.ஆர்.கவாய்,  ஜெ.பி. பர்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

அப்போது,  நன்கொடை அளித்தவர்கள் பெயர்களை கவனமாக ஒப்பிட்டு பார்க்க வேண்டியுள்ளது.  அதற்கு காலஅவகாசம் வேண்டும் என எஸ்பிஐ வங்கி சார்பில் வாதம் முன் வைக்கப்பட்டிருந்தது.  “தேர்தல் பத்திர விவகாரத்தில் உத்தரவு பிறப்பித்து 26 நாட்கள் ஆகிறது.  இந்த 26 நாட்களாக என்ன செய்து கொண்டு இருந்தீர்கள்? எஸ்.பி.ஐ. வங்கியால் செய்ய முடியாத வேலை எதையும் நாங்கள் கொடுக்கவில்லை.  ஏற்கனவே நீங்கள் செய்து கொண்டிருக்கும் வேலையை தான் நாங்கள் வழங்கி இருக்கிறோம்.  அப்படியெனில் அந்த வேலையை செய்து முடிக்க தற்போது கால அவகாசம் கேட்பது ஏன்?” என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் கேள்வி எழுப்பினார்.

இதையும் படியுங்கள் : காவிரி எல்லையில் கனமழை – ஒகேனக்கல்லில் நீர்வரத்து 9000 கன அடியாக உயர்வு!

“உச்சநீதிமன்ற உத்தரவின் சில பகுதிகளை திருத்தம் செய்தால்,  மூன்று வாரங்களுக்குள் விவரங்களை தாக்கல் செய்ய இயலும்” என்று எஸ்.பி.ஐ. வங்கி தரப்பு தெரிவித்தது. இதனையடுத்து நேற்றைக்குள் தேர்தல் பத்திரம் தொடர்பான விவரங்களை தேர்தல் ஆணையத்துக்கு எஸ்.பி.ஐ.வழங்க வேண்டும்.  அந்த விவரங்களை 15-ம் தேதி மாலை 5 மணிக்குள் தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும்.  கடந்த பிப்ரவரி 15-ம் தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவை செயல்படுத்த தவறினால்,  எஸ்.பி.ஐ. அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் உத்தரவிட்டார்.

இந்நிலையில், உச்சநீதிமன்ற உத்தரவின் படி தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை எஸ்.பி.ஐ வங்கி இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு நேற்று அனுப்பி வைத்தது.  இதனையடுத்து தேர்தல் ஆணையம் இந்த விவரங்களை இணையத்தில் வெளியிட வாய்ப்பிருக்கிறது.

இந்நிலையில், தேர்தல் பத்திரங்கள் வழக்கில் மத்திய அரசுக்கு எதிரான உச்ச நீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்தாமல் ஒத்தி வைக்க குடியரசு தலைவருக்கு உச்சநீதிமன்ற பார் கவுன்சில் தலைவர் ஆதிஷ் அகர்வாலா தன்னிச்சையாக கடிதம் எழுதியுள்ளார். குடியரசு தலைவரின் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி வழக்கு சம்பந்தமான அனைத்து ஆவணங்களையும் உச்ச நீதிமன்ற தீர்ப்பையும் பரிசீலனை செய்ய வேண்டுகோள் விடுத்துள்ளார்.  இந்த கடிதம் அகில இந்திய பார் கவுன்சில் லெட்டர் பேடில் எழுதப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.

உச்சநீதிமன்ற பார் கவுன்சில் அனுமதி பெறாமல் எழுதப்பட்ட இக்கடிதத்தையும் அதன் கருத்துக்களையும் மறுத்து பார் கவுன்சில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.  இதனை உச்ச நீதிமன்ற பார்கவுன்சில் பொதுச்செயலாளர் ரோஹித் பாண்டே அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளார்.

Tags :
Adish AgarwalaECIElectionCommissionOfIndiaelectoral_bondsElectoralBondsPresidentsbisupreme Bar Council PresidentSupremeCourtofIndia
Advertisement
Next Article