பாபர் மசூதி இடிப்பு பற்றிய தகவலை பாடப்புத்தகத்தில் இருந்து NCERT நீக்கிய விவகாரம்! ஒவைசி கண்டனம்!
பாபர் மசூதி இடிப்பு ஒரு "மிகப்பெரிய குற்றச் செயல்" என்று உச்ச நீதிமன்றம் கூறியதை இந்தியக் குழந்தைகள் அறிந்து கொள்ள வேண்டும் எனக் கூறியுள்ள AIMIM-ன் தலைவரும், ஹைதராபாத் தொகுதி எம்பியுமான அசாதுதீன் ஒவைசி, இந்த தகவல்கள் பாடப்புத்தகத்தில் இருந்து நீக்கப்பட்டதற்கும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
NCERT 12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் பாடப் புத்தகத்தைத் திருத்தி, “பாப்ரி மஸ்ஜித்” என்ற வார்த்தையை நீக்கியது ஏற்கனவே சர்ச்சையானது. இது தற்போது புதிய பாடப்புத்தக பதிப்பில் “மூன்று குவிமாடம் கொண்ட அமைப்பு” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், குஜராத்தில் சோம்நாத்தில் இருந்து அயோத்தி வரையிலான பாஜக ‘ரத யாத்திரை’, பாபர் மசூதி இடிப்பு மற்றும் அதற்கு பின் நடந்த வகுப்புவாத வன்முறையில் கர சேவகர்களின் பங்கு உள்ளிட்ட பலப்பகுதிகள் நீக்கப்பட்டுள்ளன.
இது குறித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சியின் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக பாஜகவின் சித்தாந்த வழிகாட்டியான ஆர்எஸ்எஸ் அமைப்பின் துணை அமைப்பாக என்சிஇஆர்டி செயல்பட்டு வருவதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.
இதன் தொடர்ச்சியாக AIMIM-ன் தலைவர் அசாதுதீன் ஒவைசியும் இவ்விவகாரம் குறித்து கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், பாபர் மசூதி இடிப்பு பற்றி குழந்தைகள் தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் தனது X தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், “என்சிஇஆர்டி பாபர் மசூதியை ‘மூன்று குவிமாடம் கொண்ட அமைப்பு’ என்று பதிப்பிட்டுள்ளது. அயோத்தி தீர்ப்பை ‘ஒருமித்த கருத்து’ என்றும் தெரிவித்துள்ளது. பாபர் மசூதி இடிப்பு ஒரு "மிகப்பெரிய குற்றச் செயல்" என்று உச்ச நீதிமன்றம் கூறியதை இந்தியக் குழந்தைகள் அறிந்து கொள்ள வேண்டும். 1949ல் இயங்கி வந்த மசூதி மூடப்பட்டு, 1992ல் ஒரு கும்பலால் இடிக்கப்பட்டது என்பதை இந்திய குழந்தைகள் அறிந்து கொள்ள வேண்டும். இந்திய குழந்தைகள் குற்றச் செயல்களை புகழ்ந்து வளரக்கூடாது என்று ட்வீட் செய்துள்ளார்.