மலையாள சினிமாவில் அதிர்வலைகளை ஏற்படுத்திய #HemaCommitteeReport!
மலையாள சினிமாவில் திரைமறைவில் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல்ரீதியான அத்துமீறல்கள் குறித்து விசாரணை நடத்திய ஹேமா கமிஷன் அறிக்கை வெளியாகி அதிர்வலைகளை எழுப்பியுள்ளது.
கேரளாவில் ஓடும் வாகனத்தில் நடிகை ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதை அடுத்து, இது குறித்து ஹேமா கமிஷன் அமைக்கப்பட்டது. இந்த வழக்கில் நடிகர் திலீப் தற்போது விசாரணையை எதிர்கொண்டுள்ளார்.
இந்நிலையில், மலையாள சினிமாவில் திரைமறைவில் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல்ரீதியான அத்துமீறல்கள் குறித்து விசாரணை நடத்திய ஹேமா கமிஷன் அறிக்கை 2019-ம் ஆண்டு கேரள அரசிடம் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் நேற்று அது வெளியானது. அதில் நடிகைகள் வாய்ப்புக்காக அட்ஜஸ்ட் செய்துகொள்ளும் நிலை இருப்பதாகக் கூறப்பட்டிருக்கிறது. நடிகைகள் மற்றும் பெண்களுக்காகத் தனியாக டாய்லெட் வசதியோ, உடை மாற்றும் வசதியோ இல்லை என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. மேலும், அந்த அறிக்கையில் சினிமா துறை குறித்த அதிர்ச்சிகரமான சில தகவல்கள் இடம்பெற்றிருக்கின்றன.
அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
- `சில தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர்களின் பிடியில் மலையாள சினிமா இருக்கிறது. இவர்கள், மற்றவர்கள்மீது அதிகாரத்தைச் செலுத்தி வருகின்றனர்.
- அந்த மாஃபியா குழு இயக்குநர்களையும், தயாரிப்பாளர்களையும், நடிகர்களையும் இந்தத் துறையிலிருந்து வெளியேற்றும் அதிகாரம் படைத்திருக்கிறது.
- இந்த மாஃபியாவின் முன்வரிசையில் 10, 15 பேர்கொண்ட பவர் குரூப் இருக்கிறது.
- தெரிந்தோ, தெரியாமலோ இந்த பவர் குரூப்புக்கு எதிராகப் பேசினாலோ, செயல்பட்டலோ சினிமா துறையிலிருந்து அவர்களை விலக்கிவைக்கவும், அவர்களிடமிருந்து தொடர்ந்து தொல்லைகளைச் சந்திக்கவும் நேரிடும்.
- படப்பிடிப்பு செட்டில், போதைப்பொருள்கள் பயன்படுத்துவது அதிகமாகியிருக்கிறது.
- போதையில்தான் பாலியல் அத்துமீறல்கள் அதிகம் நடந்திருக்கின்றன.
- பெரும்பாலான நடிகர்கள் மது போதையில்தான் படபிடிப்பு தளத்துக்கு வருகிறார்கள்.
- இவர்களில் பெரும்பாலானோர் மது மட்டுமல்லாமல் போதைப்பொருள்களையும் பயன்படுத்துகிறார்கள்” இது போன்ற பல அதிர்ச்சிகரமான தகவல்கள் ஹேமா கமிஷன் அறிக்கையில் கூறப்பட்டிருக்கின்றன.
இந்நிலையில், ஹேமா கமிஷன் அறிக்கை அரசியல்ரீதியாகவும் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது. சினிமா துறையில் பெண்களுக்கு எதிரான வக்கிரங்கள் நடந்தது 2019-ம் ஆண்டே ஹேமா கமிஷன் அறிக்கை மூலம் ஆதாரபூர்வமாகக் கிடைத்தும், கடந்த நான்கரை ஆண்டுகளாக அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என எதிர்க்கட்சியான காங்கிரஸ் கேள்வி எழுப்பியிருக்கிறது.
இது குறித்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீசன் கூறுகையில், "ஹேமா கமிஷன் அறிக்கை என அரசு வெளியிட்ட பகுதி அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இன்னும் வெளிவராத பாகங்களும் இருக்கின்றன. சினிமா துறையில் பாலியல் தொல்லைகளும், கிரிமினல் குற்றங்களும், அராஜகமும் நடப்பது அதிர்ச்சிகரமானது. இவையெல்லாம் சினிமா துறையில் பரவியிருப்பதாக ஹேமா கமிஷன் அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது. நான்கரை ஆண்டுகளாக இது போன்ற ஒரு ரிப்போர்ட்டை கையில் வைத்துக்கொண்டு வெளியிடாமல் அதை எதற்காக அரசு அடைக்காத்துக்கொண்டிருந்தது என்ற கேள்வி எழுந்து, வருத்தத்தை ஏற்படுத்துகிறது. இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீசன் கூறியுள்ளார்.