அதிகரித்து வரும் BTS மோகம் - இசைக்குழுவை காண கரூர் மாணவிகள் சென்றது உண்மைதானா..?
பள்ளிக்கூடம் சென்ற கரூர் மாணவிகள் மாயமானதும் அதனைத் தொடர்ந்து அவர்கள் காட்பாடி ரயில் நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்டதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுக்க BTS ஜுரம் தொற்றிக் கொள்ள அதன் தாக்கம் தமிழ்நாட்டின் கடைகோடி கிராமத்தையும் வந்தடைந்துள்ளது. பள்ளிக்கூடம் செல்வதாக கூறி மாயமான மாணவிகள் காட்பாடி ரயில் நிலையத்தில் வைத்து காவல்துறையால் கண்டுபிடிக்கப்பட்டனர். மாணவிகளிடம் விசாரித்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.
பி.டி.எஸ்., குழுவில் இடம்பெற்றுள்ள ஆர்.எம்., ஜின், சுகா, ஜெ-ஹோப், ஜிமின், வி மற்றும் ஜங்கூக் ஆகியோர் தங்களுக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளனர். இவர்களால் தென் கொரிய பொருளாதாரத்திற்கு பில்லியன் டாலர் கணக்கில் வருவாய் கிடைத்துக் கொண்டிருந்தது
பிடிஎஸ் குழுவில் உள்ள அனைவருமே 20 வயதுகளில் உள்ளவர்களே. லிப்ஸ்டிக்கும், விதவிதமான காதணிகளும், உள்ளம் கவர் குரலும், இசையுமே இவர்களின் அடையாளம். கடந்த 9 ஆண்டுகளாக இந்த இசைக்குழு ஏராளமான பாப் இசைப் பாடல்களைப் பாடி ரசிகர்களை மகிழ்வித்துவந்தது.
பிடிஎஸ் குழு 2010-இல் உருவாக்கப்பட்டு 2013-இல் பிக் ஹிட் என்டர்டெயின்மென்ட் என்ற நிறுவனத்தின் கீழ் அறிமுகமானது. இக்குழுவின் பாடல்கள் பெரும்பாலும் சமூக நிகழ்வுகளை மையமாகக் கொண்டவை. இதன் காரணமாக இக்குழுவின் பாடல்கள் இளைய தலைமுறையிடத்தில் மிகவும் பிரபலம். பிடிஎஸ் இசைக் குழு இதுவரை 6 அமெரிக்க இசை விருதுகள், 5 பில்போர்டு மியூசிக் விருதுகளையும் வென்றுள்ளது.
பதற்றமடைந்த மாணவிகளின் பெற்றோர் காவல்துறையில் புகார் அளித்தனர். இந்நிலையில் காணாமல்போன மூன்று மாணவிகளும் நேற்று காட்பாடி ரயில் நிலையத்தில் இருந்து ரயில்வே போலீசாரால் மீட்கப்பட்டனர். மாணவிகள் தனியே வந்ததையடுத்து, சந்தேகத்தின்பேரில் நடத்திய விசாரணையில் அந்த மாணவிகள் கரூரைச் சேர்ந்தவர்கள் என்பதை காவலர்கள் கண்டறிந்தனர்.
8ஆம் வகுப்பு மாணவிகள் பிடிஎஸ் இசைக்குழுவை காண தப்பியோடியதாக கூறப்படும் சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக மாணவிகள் குறித்து யாரும் தவறான தகவல்கள் பரப்ப வேண்டாம் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.