வாக்குப்பதிவு நாளன்று சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருந்த மேற்கு வங்க ஆளுநர்! பயணத்தை ரத்து செய்ய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்!
வாக்குப்பதிவு நாளன்று சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருந்த மேற்கு வங்க ஆளுநருக்கு பயணத்தை ரத்து செய்ய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
மேற்குவங்கம் மாநிலம் கூச் பெஹர் பகுதிக்கு அம்மாநில ஆளுநர் ஆனந்தபோஸ், வரும் 18, 19 தேதியில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருந்த நிலையில், அவர் செல்ல வேண்டாம் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. அங்கு வரும் 19ம் தேதி வாக்குப்பதிவு நடக்க இருப்பதால், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதை சுட்டிக்காட்டி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ள கூச் பெஹாருக்கு மேற்கு வங்க ஆளுநரின் சுற்றுப்பயணம் பற்றி அறிந்த பிறகு, பயணத்தை தொடர வேண்டாம் என்று ஆளுநர் அலுவலகத்திற்கு அறிவுறுத்தியதாக தேர்தல் ஆணைய வட்டாரம் தெரிவித்துள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறையில் இருப்பதாலும், வாக்குப்பதிவும் நடப்பதாலும் ஆளுநரால் உள்ளூர் நிகழ்ச்சி எதுவும் நடத்த முடியாது என்று தேர்தல் ஆணையம் அவரது அலுவலகத்தில் தெரிவித்தது.
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951 இன் பிரிவு 126 இன் கீழ், வாக்குப்பதிவுக்கு முந்தைய 48 மணி நேர அமைதிக் காலத்தில் எந்தப் பிரச்சாரமும் அனுமதிக்கப்படாது. எனவே ஆளுநரின் இந்த சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள வேண்டாம் என தேர்தல் ஆணையம் அறிவுரை வழங்கியுள்ளது. மேற்குவங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ், பாஜக, காங்கிரஸ்-இடதுசாரிகள் கூட்டணி என மும்முனை போட்டி நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.