“தமிழ்நாட்டின் வளர்ச்சியை ஆளுநரால் ஜீரணிக்க முடியவில்லை” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
தமிழ்நாடு வளர்ந்து வருவதை ஆளுநரால் ஜீரணிக்க முடியவில்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நடப்பாண்டின் சட்டசபை கூட்டத்தொடர் கடந்த ஜன.6ஆம் தேதி தொடங்கியது. இன்றுடன் முடிவடைகிறது. இந்நிலையில் இன்று சட்டசபையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,
“பராசக்தி படத்தில் வரும் “இந்த நீதிமன்றம் எத்தனையோ விசித்திரமான வழக்குகளை பார்த்துள்ளது” வசனத்தை போல, சட்டமன்றம் சில ஆண்டுகளாக ஆளுநரை பொறுத்தவரை விசித்திரமான காட்சிகளை பார்த்து வருகிறது. உரையாற்ற வருவார், ஆனால் உரையாற்றாமலேயே போய்விடுவார். இந்த காரணத்தினால்தான் ஆளுநரின் செயல்பாடுகளை சிறுபிள்ளைதனமானது என விமர்சித்தேன்.
அரசியலமைப்பு சட்டப்பிரிவின் படி, ஆண்டின் தொடக்கத்தில் ஆளுநர் உரையாற்ற வேண்டும். அரசால் வழங்கப்படும் உரையை அப்படியே வாசிக்க வேண்டும் என்பதுதான் நடைமுறை, மரபு. ஆனால் விதிமீறலில்தான் ஆளுநர் குறியாக உள்ளார். 2021ஆம் ஆண்டு ரவி ஆளுநராக நியமிக்கப்பட்டார். 2022ஆம் அண்டு உரையை முழுமையாக வாசித்தார். ஆனால் இந்த மூன்று ஆண்டுகளாக பல்வேறு காரணங்களை கூறி உரையை புறக்கணித்ததை அனைவரும் அறிவீர்கள்.
பேரவை தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும், அவை நடவடிக்கைகள் நிறைவடையும் போது நாட்டுப்பண் இசைப்பதே காலம் காலமான மரபு. இதை கூறியபிறகும் உரையாற்ற மறுக்கிறார். தமிழ்நாட்டின் வளர்ச்சியை அவரால் ஜீரணிக்க முடியவில்லை. முதலமைச்சர் சாதரணமானவராக இருக்கலாம். சட்டமன்றம் நூற்றாண்டு கால பழமை வாய்ந்தது. சட்டமன்றத்தின் மாண்பை மதிக்காமல், மக்களுடைய எண்ணங்களை மதிக்காமல் தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்ததன் மூலம்,தான் வகிக்கும் பதவிக்கும், பொறுப்புக்கும் இழுக்கு ஏற்படுத்தும் காரியத்தை அரசியல் உள்நோக்கத்தோடு ஆளுநர் செய்வது இந்த மன்றம் காணாது, இனியும் காணக்கூடாது.
அரசியல்ரீதியாக திமுகவை புறக்கணிப்பதை நாங்கள் பெரிதாக எடுத்துகொள்ள மாட்டோம். ஏனெனில் திமுக இயக்கம் புறக்கணிப்புகள், அவமானங்கள், ஒடுக்குதல்கள் ஆகியவற்றிற்கு எதிராக உதயமானதுதான். இந்த இயக்கத்தை தாண்டி கடைபிடிக்கப்பட்ட தீண்டாமைகளையும் தாண்டிதான் நூற்றாண்டு கண்டிருக்கிறோம். ஒரு சமூக சீர்திருத்த இயக்கம் அரசியல் கட்சியாக மாறி ஆறாவது முறையாக ஆட்சியை கைப்பற்றிய வரலாறு திமுகவிற்குதான் உண்டு. நிச்சயமாக கூறுகிறேன். 7வது முறையும் ஆட்சி அமைத்து ஏற்றம் காணும் அரசாக திமுக அமையும்” எனப் பேசினார்.