"இளைஞர்களுக்கு வேலை கொடுக்கக் கூடாது என்பதற்காக அரசே வினாத்தாளை கசியவிடுகிறது" - அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு!
"இளைஞர்களுக்கு வேலை கொடுக்கக் கூடாது என்பதற்காக அரசே வினாத்தாளை கசிய விடுகிறது" என்று சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார்.
18வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் தற்போது நடந்து வருகிறது. ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடந்து வருகிறது. நீட்தேர்வு முறைகேடு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை எதிர்க்கட்சிகள் எழுப்பி வருகின்றன. அதன்படி, மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பேசிய ராகுல் காந்தி மத்திய அரசிடம் பல்வேறு கேள்விகளை முன்வைத்தார்.
குறிப்பாக அக்னிவீரர் திட்டம், பாஜகவின் வெறுப்பு அரசியல், அரசின் விசாரணை அமைப்புகள் மூலம் எதிர்க்கட்சிகள் மிரட்டப்படுவது என பல்வேறு விவகாரங்கள் குறித்த கேள்விகளை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேற்று மக்களவையில் எழுப்பினார். குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு பதிலளித்து பிரதமர் மோடி இரு அவைகளிலும் இன்று உரையாற்றவுள்ளார்.
இந்த நிலையில், மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பேசிய சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், "இளைஞர்களுக்கு வேலை கொடுக்கக் கூடாது என்பதற்காக அரசே வினாத்தாளை கசிய விடுகிறது" என்று குற்றம் சாட்டியுள்ளார்.