அரசை பிறகு விமர்சித்துக் கொள்ளலாம்; மக்களுக்கு உதவுவதே முக்கியமானது - கமல்ஹாசன்
அரசை பிறகு விமர்சித்துக் கொள்ளலாம், மக்களுக்கு உதவுவதே முக்கியமானது என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில், பொன்னேரி, திருவெற்றியூர், ஆர்.கே நகர், வில்லிவாக்கம், எழும்பூர், சைதாப்பேட்டை, சோளிங்கநல்லூர், பெரம்பூர், ராயபுரம், வேளச்சேரி ஆகிய பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
அரிசி, ரவா, கோதுமை, பால் பவுடர், தண்ணீர் பாட்டில் உள்ளிட்ட நிவாரண பொருட்கள் வழங்கப்படுகிறது. இதனைத்தவிர வேளச்சேரியில் தினமும் 5 ஆயிரம் பேருக்கு உணவு பொட்டலங்கள் வழங்கப்பட உள்ளன. இந்த நிவாரண பொருட்கள் வழங்கும் வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்த பின் அக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர், நாம் எதிர்பார்த்த அளவை விட அதிக அளவு பாதிப்பு என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும். இது பேரிடர் பாதிப்பு என்பது எந்த சந்தேகமும் இல்லை, இந்த நேரத்தில் நாம் யாரையும் குறை சொல்ல வேண்டிய நேரம் இல்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்காக இறங்கி வேலை செய்ய வேண்டிய நேரம். வேலை மட்டும் கிடையாது இது ஒவ்வொருவரின் கடமை.
இயற்கை பேரிடர் பாதிப்பு என்பதால் நாம் யாரும் நினைத்துப் பார்க்காத அளவிற்கு
இந்த முறை மழை பதிவாகி உள்ளது. அவற்றை திமுக ஆட்சியை குறை சொல்லுவதோ, அதிமுக ஆட்சியை குறை சொல்லுவதோ, விட்டு விட்டு அனைவரும் மக்களுக்காக இறங்கி வேலை செய்ய வேண்டும்.
மேலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 5000-க்கும் மேற்பட்ட மக்களுக்கு இயல்பு
நிலை திரும்பும் வரை உணவு வழங்குவதாக கூறினார். இந்த மழை வெள்ளம் பாதிப்பு குறித்து ஊடகவியலாளர்கள் களத்திலிருந்து சிறப்பாக பணியாற்றினார்கள். செய்தி செய்தியாக இருந்தது பதற்றத்தை உருவாக்கவில்லை. எனவே ஊடகத்திற்கு எனது பாராட்டுக்கள். மேலும் தேவைப்படும் இடங்களுக்கு மருத்துவ முகாமையும் வருகிற
ஞாயிற்றுக்கிழமையிலிருந்து தொடங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.