“அரசும், அதிகாரிகளும் தன்னிச்சையாக செயல்பட இயலாது” - ‘புல்டோசர் நடவடிக்கை’ வழக்கில் உச்ச நீதிமன்றம் காட்டம்!
“குற்றச்சாட்டுக்கு உள்ளான காரணத்திற்காக ஒருவரது குடியிருப்புகளை இடித்து தள்ளுவது சட்ட விரோதமானது” என புல்டோசர்களை கொண்டு கட்டடங்களை இடிப்பதற்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டவர்களின் வீடுகள், கட்டுமானங்களை புல்டோசர் கொண்டு இடிக்கப்படும் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதுதொடர்பாக நீதிபதிகள் பி.ஆர்.கவாய் மற்றும் கே.வி.விஸ்வநாதன் அமர்வு வழங்கிய தீர்ப்பு;
“முக்கிய செயல்பாடுகளை நிறைவேற்றுவதில் நீதித்துறைக்கு மாற்றானதாக அரசு இருக்க முடியாது. அந்த வகையில் உரிய சட்ட விதிமுறைகளை பின்பற்றாமல் ஒருவரின் வீடு அல்லது கட்டுமானத்தை அரசு நிர்வாகம் இடிப்பது என்பது அநீதியாகும். குற்றம் சாட்டபட்டதற்காக ஒருவரின் சொத்துக்களை இடித்துத் தள்ளுவது என்பது அது அதிகார துஷ்பிரயோகம் ஆகும்.
மேலும் அவ்வாறு தவறாக தங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி, சட்டவிரோத நடவடிக்கையை மேற்கொள்ளும் அதிகாரிகளே அக்குற்றத்துக்கான பொறுப்பும் ஆவர். குற்றம் சாட்டப்பட்டவருக்கும் உரிமைகள் மற்றும் சட்ட பாதுகாப்புகள் உள்ளன. அரசும், அதிகாரிகளும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அல்லது குற்றவாளிகளுக்கு எதிராக தன்னிச்சையான நடவடிக்கை எடுக்க முடியாது.
குற்றச்சாட்டுக்கு உள்ளான காரணத்திற்காக ஒருவரது குடியிருப்புகளை இடித்து தள்ளுவது சட்ட விரோதமானது. கட்டிடங்களை இடிக்கும் விவகாரத்தில் நீதித்துறையின் அதிகாரத்தை நிர்வாகங்கள் கையில் எடுத்துக் கொள்ள முடியாது. குற்றச்சாட்டுக்கு உள்ளான ஒரே காரணத்திற்காக ஒருவரது கட்டிடத்தை இடிப்பது என்பது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது.
ஒருவர் ஒரு வீட்டைக் கட்டுவது என்பது சமூகப் பொருளாதார அடையாளமும், அம்சமும் ஆகும். வீடு என்பது வெறும் ஒரு சொத்து அல்ல. அது ஒருவரின் பல ஆண்டுகால போராட்டத்தின் அடையாளமாகும். மேலும் வீடு என்பது ஒரு குடும்பத்துக்கு கண்ணியத்தை அளிக்கிறது. எனவே அந்த உரிமை பறிப்பது என்றால், அந்த நடவடிக்கை மட்டுமே இரு முடிவானதாக இருந்தது என்பதை நிர்வாகம் அல்லது அதிகாரிகள் நியாயப்படுத்த வேண்டும்.
மேலும் குற்றவியல் நீதித்துறையின் கொள்கையை பொறுத்தவரை, குற்றம் சாட்டப்பட்டவர் குற்றவாளி என்று நிரூபிக்கப்படும் வரை அவரை நிரபராதி என்றே கருதுகிறது. அப்படி இருக்கையில், ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்ட காரணத்துக்காக அவரது வீடு அல்லது கட்டிடம் இடிக்கப்பட்டால், அது அனைத்து குடும்ப உறுப்பினர்களுக்குமான ஒரு கூட்டுத் தண்டனையாகவே உள்ளது. இதை அரசியல் சாசன சட்டப்படி அனுமதிக்க முடியாது” என தீர்ப்பு வழங்கினர்.