“ஜவுளி ஏற்றுமதியை ரூ.9 லட்சம் கோடியாக அதிகரிக்க வேண்டும் என்பதே இலக்கு” - பிரதமர் மோடி பேச்சு!
டெல்லியில் பாரத் டெக்ஸ் என்ற பெயரில் ஜவுளித் தொழிலின் பிரம்மாண்ட கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதையொட்டி அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நேற்று (பிப். 16) பேசியதாவது,
“120-க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்றுள்ளதன் மூலம், உலக அளவில் மிகப் பெரிய நிகழ்ச்சியாக பாரத் டெக்ஸ் கண்காட்சி உருவெடுத்து வருகிறது. நாட்டில் அதிக எண்ணிக்கையில் வேலைவாய்ப்புகள் அளிக்கும் தொழில்களில் ஒன்றாக ஜவுளித் தொழில் விளங்குகிறது. இந்தியாவின் உற்பத்தித் துறையில் ஜவுளித் தொழிலின் பங்கு 11 சதவீதமாகும்.
உயர்தர கார்பன் இழைகளை தயாரிக்கும் திசையை நோக்கி இந்தியா பயணித்து வருகிறது. ஜவுளி துறையின் ஓர் அலகுக்கு ரூ.75 கோடி முதலீடு தேவைப்படுவதுடன், அந்த அலகு மூலம் 2,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது. எனவே அந்தத் துறைக்கு வங்கிகள் நிதியுதவி அளிக்க வேண்டும். கடந்த ஆண்டு இந்தியாவின் ஜவுளி மற்றும் ஆடைகள் ஏற்றுமதி 7% வளர்ச்சியடைந்தது. ஜவுளி மற்றும் ஆடைகள் ஏற்றுமதி செய்யும் பெரிய நாடுகளில் இந்தியா 6-ஆவது இடத்தில் உள்ளது.
தற்போது ஜவுளி ஏற்றுமதிகளின் மதிப்பு சுமார் ரூ.3 லட்சம் கோடியாக உள்ளது. இதை ரூ.9 லட்சம் கோடியாக மும்மடங்கு அதிகரிக்க வேண்டும் என்பதே இலக்கு. தற்போது நடைபெற்று வரும் பணிகளைக் கருத்தில் கொள்ளும்போது 2030-க்குள் இந்த இலக்கு எட்டப்படும் என்று கருதுகிறேன்.
ஜவுளித் துறையில் இந்தியாவுக்கு கிடைத்த வெற்றிக்கு கடந்த 10 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட கடினமான பணி, அமல்படுத்தப்பட்ட நிலையான கொள்கைகளே காரணம். இது ஜவுளித் துறை மீதான அந்நிய முதலீட்டை இரட்டிப்பாக்கியுள்ளது. தமது தொழில் சாா்ந்த புதிய கருவிகளை உருவாக்க ஐஐடி போன்ற நற்பெயர் கொண்ட நிறுவனங்களுடன் ஜவுளித் துறையினர் கைகோர்க்க வேண்டும்”
என தெரிவித்தார்.