"2030-க்குள் ஒரு ட்ரில்லியன் பொருளாதாரமே இலக்கு" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
உலகின் முன்னணி ஸ்டார்ட் அப் மையங்களுள் ஒன்றாக தமிழ்நாட்டை நிலை நிறுத்தவும், உலகளாவிய ஸ்டார்ட் அப் நிறுவனங்களுடன் இணைக்கவும், புதிய சந்தை வாய்ப்புகளை ஏற்படுத்தும் விதமாகவும் நாட்டில் முதல் முறையாக கோவையில் கொடிசியா அரங்கில் உலக புத்தொழில் மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது,
"தொழில் மாநாடுகள் நடத்துவதன் மூலம் தமிழ்நாட்டின் தொழில்துறை மட்டும் வளர்ச்சியடையாமல் ஒட்டுமொத்த மாநிலமும் வளர்ச்சியடைகிறது. தொழில் நிறுவனங்கள் மூலம் மாநிலமும், வேலைவாய்ப்புகள் மூலம் குடும்பங்களும் வாழ்கிறது. உலகின் தலை சிறந்த புத்தொழில் மையமாக தமிழ்நாட்டை கட்டமைப்பதுதான் திராவிட மாடல் அரசின் மாபெரும் கனவு.
புத்தொழில் நிறுவனங்களில் கடைசி இடத்தில் இருந்த தமிழ்நாடு 4 ஆண்டுகளில் முதலிடத்தை பிடித்துள்ளது. கோவையில் அடுத்த மாதம் ரூ.175 கோடியில் செம்மொழிப் பூங்கா திறக்கப்படவுள்ளது. விரைவில் பெரியார் நூலகம், கிரிக்கெட் ஸ்டேடியம் என அடுத்தடுத்து திறக்க உள்ளோம்.
தொழில் நகரமான கோவை வளர்ச்சிக்கு துணை நிற்கும் திராவிட மாடல் அரசின் பயணம் திராவிட மாடல் 2.0-விலும் தொடரும் 2030ஆம் ஆண்டிற்குள் தமிழ்நாட்டை 1 டிரில்லியன் டாலர் பொருளாதார மாநிலமாக மாற்றுவதற்கான முனைப்புடன், நம் அரசு செயல்பட்டு வருகிறது. பெரிய தொழில்கள் மட்டுமல்ல, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களும் இதில் முக்கிய பங்காற்றி வருகின்றன"
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.