Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“ஒட்டுமொத்த கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது!” - பரிதாபங்கள் #youtube சேனலுக்கு ஆதரவாக தமிழ்நாடு டிஜிட்டல் படைப்பாளிகள் அறிக்கை…

09:34 PM Oct 01, 2024 IST | Web Editor
Advertisement

‘பரிதாபங்கள்' யூடியூப் சேனலில் வெளியான, திருப்பதி லட்டு குறித்த வீடியோவை, பாஜக நீக்க செய்திருப்பது, ஒட்டுமொத்த கருத்து சுதந்திரத்திற்கும் எதிரானது என தமிழ்நாடு டிஜிட்டல் படைப்பாளிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Advertisement

திருப்பதி லட்டுவில் கலப்பட நெய் கலக்கப்பட்டதாக எழுந்த புகார் குறித்து வீடியோ வெளியிட்ட பரிதாபங்கள் யூடியூப் சேனலுக்கு ஆதரவாக தமிழ்நாடு டிஜிட்டல் படைப்பாளிகள் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அந்த தமிழ்நாடு டிஜிட்டல் படைப்பாளிகளின் கூட்டறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

பரிதாபங்கள் யூடியூப் சேனலின் நிறுவனர்கள் கோபி சுதாகருக்கு எதிராக விடுக்கப்படும் அச்சுறுத்தல்களை வன்மையாக கண்டிக்கிறோம்.

சமீபத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானதில் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில் கலப்பட நெய் சேர்க்கப்பட்டதாக ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஒரு தகவலை வெளியிட்டார். இதைத்தொடர்ந்து திருப்பதி லட்டு இந்தியா முழுவதும் பேசுபொருளாக மாறியது. இவ்வாறு, மக்களிடையே பேசுபொருளாக மாறும் ஒரு விவாகரம் அரசியல், கலை, பண்பாடு என அனைத்து தளங்களிலும் எதிரொலிப்பதும், ஆதரவு மற்றும் எதிர்ப்பு கருத்துகளுடன் ஒரு விவாதம் நடைபெறுவதும் ஆரோக்கியமான ஜனநாயகப்பூர்வமான சமூகத்தில் இயல்பானது.

இந்திய அரசியல் அமைப்புச் சட்டமும் இந்தியாவை அப்படியாகவே வரையறுத்துள்ளது. அந்தவகையில், சந்திரபாபு நாயுடு தெரிவித்த சுருத்திற்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் பல அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்தனர். அதேபோல், கலைஞர்களும், பத்திரிகையாளர்களும், சமூக செயல்பாட்டாளர்களும் கருத்துகளைத் பதிவிட்டனர். இந்த ஆரோக்கியமான கருத்து பரிமாற்றம் அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள கருத்துச் சுதந்திர உரிமையின் அடிப்படையிலேயே நடைபெற்றது. இருந்தபோதும், திருப்பதி லட்டு குறித்து தெரிவிக்கப்பட்ட சில கருத்துகளை வேண்டுமென்றே திரித்து, அக்கருத்தை வெளியிட்டவர்களை சிலர் மிரட்டி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக, 'பரிதாபங்கள்' என்ற யூடியூப் சேனலில் வெளியான, திருப்பதி லட்டு குறித்த வீடியோவுக்கு தமிழ்நாடு பாஜகவை சேர்ந்த சிலர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். அதை வெளியிட்ட கோபி -சுதாகரை மிரட்டி, அந்த வீடியோவையே நீக்கச் செய்துள்ளனர். நகைச்சுவை மூலமாக நல்ல கருத்துகளை மக்களுக்கு எடுத்துச் செல்லும் கலை வடிவம், நிகழ்த்துக் கலைகளில் மிக முக்கியமானது. இந்த கலை வடிவத்தை பின்பற்றும் கோபி - சுதாகர், மக்களை சிரிக்க வைப்பதுடன் சிந்திக்க வைக்கும் பணியையும் செய்து வருகின்றனர். ஆனால், இந்தக் கலைவடிவம் தமிழ்ச் சமூக வளர்ச்சிக்கு ஆற்றியுள்ள பணியை மறுதலிக்கும் வகையிலும், இந்திய அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள கருத்துச் சுதந்திர உரிமையை காலில் போட்டு மிதிக்கும் வகையிலும், கோபி - சுதாகருக்கு எதிராக மிரட்டல் விடுத்து வரும் பாஜகவை சேர்ந்த தலைவர்களை வன்மையாக கண்டிக்கிறோம்.

இதேபோல், குணால் கம்ரா. முனாவர் ஃபரூக்கி போன்ற நகைச்சுவைக் கலைஞர்களுக்கும் பாஜகவினர் தொடர்ந்து மிரட்டல் விடுத்துவருவதுடன் அவர்கள் நிகழ்ச்சி நடத்தவிடாமல் தடை ஏற்படுத்தி வருவதையும் இங்கு குறிப்பிட விரும்புகிறோம். கோபி, சுதாகர் மட்டுமல்லாமல் அவர்களை சார்ந்தவர்களும் சமூக வலைதளங்களில் அச்சுறுத்தலுக்குள்ளாக்கப்பட்டு வருவதுடன், அவர்களின் தொழிலை முடக்கும் வகையிலும் பாஜக மற்றும் அதன் ஆதரவாளர்கள் செயல்பட்டு வருகின்றனர்.

ஆகவே, கோபி - சுதாகர் மற்றும் அவர்கள் குடும்பத்தாரின் பாதுகாப்பை தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும். அத்துடன் அவர்களுடைய தொழில் பாதுகாப்பும் உறுதி செய்யப்பட வேண்டும். இது பரிதாபங்களுக்கு எதிரானது மட்டுமல்ல ஒட்டுமொத்த கருத்து சுதந்திரத்திற்கும் எதிரானது எனவே கருத்துரிமையை பாதுகாக்க தமிழ்நாடு அரசு அழுத்தமான நடவடிக்கை எடுக்க வேண்டும். 'பரிதாபங்கள்' யூடியூப் சேனல் வெளியிட்ட திருப்பதி லட்டு குறித்த வீடி யோ மீண்டும் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். அரசமைப்புச் சட்டத்தை பாதுகாக்க கடமைப்பட்ட அனைவரும் ஒருங்கிணைந்து, இதை சாத்தியப்படுத்த வேண்டும் என்று அழைப்பு விடுக்கிறோம்.

Tags :
condemncontroversyDigital CreatorsGopi SudhakarLaddu Paavangalnews7 tamilThreatTirupathi Laddu
Advertisement
Next Article