ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 3,500 கன அடியாக அதிகரிப்பு!
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து திடீரென 1000 கன அடியில் இருந்து 3500 கன அடியாக அதிகரித்துள்ளது.
தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தை அடுத்த ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கோடை வெயில் காரணமாக கடந்த 4 மாதங்களாக நீர்வரத்து குறைவாக இருந்தது. ஒகேனக்கல் காவிரி ஆறு ஆங்காங்கு சிறு சிறு தண்ணீர் தேங்கி குட்டைகளாக காட்சியளித்தது.
இந்நிலையில், நேற்று மாலை ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 1000 கன அடி முதல் 800 கன அடி வரை மட்டுமே இருந்தது. கர்நாடக பகுதியிலிருந்து நீர்வரத்து குறைந்ததன் எதிரொலியாக தண்ணீர் இன்றி வறண்ட காவிரி ஆற்றில் இன்று காலை விநாடிக்கு 3500 கன அடியாக அதிகரித்துள்ளது.
இதையும் படியுங்கள் : எமனேசுவரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி திருவிழா – விமரிசையாக நடைபெற்ற கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம்!
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் சுற்று வட்டார பகுதி மற்றும் வனப் பகுதிகள் காவிரி கரையோர பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக விட்டுவிட்டு மழை பெய்து வருவதால் காவிரி ஆற்றில் நீர்வரத்து திடீரென அதிகரித்து உள்ளது. நீர்வரத்து அதிகரிப்பால் ஒகேனக்கல் சினி அருவி மெயின் அருவி பகுதிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டி வருகிறது. நீர்வரத்து அதிகரிப்பால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.