காதலர் தினத்தை முன்னிட்டு ‘கண்ணாடி பூவே’ - ‘ரெட்ரோ’ படத்தின் First Single அறிவிப்பு வெளியானது!
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் படம் ‘ரெட்ரோ’. ஸ்டோன் பெஞ்ச் மற்றும் சூர்யாவின் 2டி நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், கருணாகரன் உள்ளிடோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படம் நடப்பு ஆண்டு (2025) மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இப்படத்திலிருந்து இதுவரை வெளியான முன்னோட்ட வீடியோ மற்றும் கடந்தாண்டு டிசம்பரில் வெளியான டைட்டில் டீசர் ஆகியவை ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து இப்படத்தில் ஓடிடி உரிமத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியதாக போஸ்டர் வெளியானது. இதனைத் தொடர்ந்து இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வருகிற காதலர் தினத்தன்று வெளியாகும் என தகவல் வெளியானது.
இந்த நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக 2டி நிறுவன எக்ஸ் பதிவில் போஸ்டர் வெளியிட்டுள்ளது. அதில் ‘கண்ணாடி பூவே’ என்ற தலைப்பில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் காதலர் தினத்தை முன்னிட்டு வருகிற 13ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.