தினமும் குடித்துவிட்டு பெற்றோரை தொல்லை செய்த மகன் - கட்டையால் அடித்து கொலை செய்த தந்தை!
காஞ்சிபுரத்தில் தினமும் குடித்துவிட்டு வந்து பெற்றோர்களை தொல்லைசெய்துவந்த மகனை, அவரது தந்தை கட்டையால் அடித்துக் கொலை செய்துள்ளார். மேலும், கொலையை மறைக்க கல்லைக் கட்டி ஏரியில் வீசினார்.
காஞ்சிபுரம் மாவட்டம் புதுப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் காத்தவராயன். விவசாய தொழில் செய்து வரும் இவருக்கு முனுசாமி என்ற 34 வயதுடைய மகன் இருக்கிறார். இவர் தினமும் குடித்துவிட்டு வந்து தகராறு செய்ததால் இவருடைய மனைவி மற்றும் குழந்தைகள் பிரிந்து சென்றனர். தொடர்ச்சியாக இவர் குடிபோதைக்கு அடிமையாகி பெற்றோரிடம் சண்டையிட்டு வந்துள்ளார்.
இதனால் கோபம் அடைந்த அவருடைய தந்தை காத்தவராயன் தனது மகன் முனுசாமியை கட்டையால் எதேச்சையாக அடித்துள்ளார். எதிர்பாராத விதமாக தலையில் அடி விழுந்ததால் முனுசாமி சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார். தனது மகன் இறந்ததை அறிந்த உடன் தனது வீட்டிற்கு அருகே உள்ள தனது மருமகன் ராஜேஸிடம் தகவல் தெரிவித்துள்ளார். உடலை மறைப்பதற்காக முனுசாமியின் உடலில் கல்லை கட்டி அருகில் உள்ள புதுப்பாக்கம் ஏரியில் வீசி உள்ளனர்.
இந்நிலையில், நேற்று (டிச. 20) புதுப்பாக்கம் வீதியில் மனித உடல் மிதப்பதைக் கண்டு மக்கள் பாலுசெட்டி சத்திரம் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். இதன் பெயரில், காவல்துறை விசாரணையில் காத்தவராயனும், சடலத்தை மறைக்க உதவிய மருமகன் ராஜேஷும் பாலு செட்டி சத்திரம் காவல்துறையினர் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். எந்நேரமும் இரவில் குடித்துவிட்டு வந்து பெற்றோர்களை சண்டையிட்டு வந்த முனுசாமி அவருடைய தந்தையே அடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரிதாபமாக பேசப்பட்டு வருகிறது.