Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

எந்த மாநிலமும் முன்னெடுக்காத பல்வேறு செயல்களை திராவிட மாடல் அரசு மேற்கொண்டு வருகிறது - முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு!

08:49 PM Jan 01, 2024 IST | Web Editor
Advertisement

இந்தியாவில் எந்த மாநிலமும் முன்னெடுக்காத பல்வேறு செயல்களை திராவிட மாடல் அரசு மேற்கொண்டு வருகிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Advertisement

கவிஞர் வைரமுத்து எழுதிய ‘மகாகவிதை’ நூல் வெளியிட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், நடிகருமான கமல்ஹாசன், இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ‘மகாகவிதை’ நூலின் முதல் பிரதியை வெளியிட முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பெற்றுக் கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தலைமை உரை ஆற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது,

“கவிஞராகவும், கலை விமர்சகராகவும் இருந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மட்டும் இருந்திருந்தால் மகா கவிதை தீட்டிய கவிப்பேரரசு வைரமுத்து உச்சி முகர்ந்து பாராட்டி இருப்பார். இந்த கவிப்பேரரசு என்ற பட்டமும் கருணாநிதி வழங்கியதுதான். 1989-ம் ஆண்டு எல்லா நதியிலும் என் ஓடம் என்ற புத்தகத்தை கருணாநிதியை வைத்து வைரமுத்து வெளியிட்டார்.  

எல்லா நதியிலும் என் ஓடம் என்று பெயர் வைத்து இருந்தாலும், அது எப்போது வந்து சேறும் கடலாக கருணாநிதி இருந்தார். வைரமுத்து எழுதிய 15 புத்தகங்களை வெளியிட்டவர் கருணாநிதி. மகாகவி பாரதியின் வாழ்க்கை வரலாற்றை கவிராஜன் கதை என்ற பெயரில் எழுதியது போல் கருணாநிதியின் வாழ்க்கை வரலாற்றை கவிதையாக நீங்கள் தர வேண்டும். இது எனது அன்பான வேண்டுகோள். உங்கள் தமிழில் கருணாநிதியின் வரலாறு வந்தாக வேண்டும் என்பது உங்கள் ரசிகனின் வேண்டுகோள். இன்னும் உரிமையோடு சொல்லப்போனால் அது கட்டளை.

கவிப்பேரரசு எழுதிக்கொண்டே இருக்க வேண்டும், அதனை வெளியிடும் வாய்ப்பை நான் பெற்றுக் கொண்டே இருக்க வேண்டும் என்பதுதான் எனது மகா ஆசை. நிலம், நீர், தீ, காற்று, வானம் ஆகிய ஐம்பூதங்களை பற்றிய கவிதை தொகுப்பு என்பதை நீங்கள் அறிவீர்கள். தொல்காப்பியம் தொடங்கிய இடத்திற்கு தமிழ் இலக்கியத்தை கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறார் கவிப்பேரரசு வைரமுத்து. மழை பற்றி அவர் சொல்லும் கவிதையில், திரவ ஊசியால் பூமியின் துவாரம் போலும் துளைத்த மழை என்கிறார். இதைத்தான் நாம் சில வாரங்களுக்கு முன் பார்த்தோம்.  

சென்னையாக இருந்தாலும், நெல்லையாக இருந்தாலும் வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் அதி கனமழை பெய்யும் என்று சொன்னார்களே தவிர எவ்வளவு பெய்யும் என்று சொல்லவில்லை. ஏரி உடைந்து கொட்டியது போல் வானம் உடைந்து கொட்டி மழை பெய்துள்ளது. நூறு ஆண்டில், பெரிய மழை என்று சொல்கிறோமே தவிர இதற்கான காரணங்களை சொல்லவில்லை. ஆனால் உண்மையான காரணங்களை இந்த நூலில் வைரமுத்து சொல்லிவிட்டார். மனிதன் இப்போது பூதங்களை திண்ணத் தொடங்கி விட்டான். அதனால்தான் பூதங்கள் மனிதனை தின்னத் தொடங்கிவிட்டன என இந்த நூலில் வைரமுத்து கூறுகிறார். 

இந்த நூல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க வேண்டும் என்று உங்கள் அனைவர் சார்பிலும் நான் கேட்டுக்கொள்கிறேன். நாம் எதிர்கொள்ளப்போகும் பெரும் ஆபத்தாக காலநிலை மாற்றம் தான் இருக்கும். 2050-ம் ஆண்டுக்குள் கார்பன் சமநிலையை எட்ட வேண்டும் என பன்னாட்டு அமைப்புகள் வலியுறுத்துகின்றன. இந்தியாவில் எந்த மாநிலமும் முன்னெடுக்காத பல்வேறு செயல்களை திராவிட மாடல் அரசு மேற்கொண்டு வருகிறது. அதன் தொடக்கமாகத் தான் துறையின் பெயரை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை என்று அறிவித்தோம்”

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

 

Tags :
CMO TamilNaduDMKkamal hassanMaha KavidhaiMK StalinNews7Tamilnews7TamilUpdatesTN Govtvairamuthu
Advertisement
Next Article