ஆபரேஷன் தியேட்டரில் ப்ரீ- வெட்டிங் சூட் நடத்திய மருத்துவர் பணியிடை நீக்கம்!
கர்நாடகாவில், அரசு மருத்துவமனையை பயன்படுத்தி ப்ரீ- வெட்டிங் சூட் நடத்திய மருத்துவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
கர்நாடக மாநிலம், சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள பரமசாகர் அரசு மருத்துவமனையில் அனுமதியின்றி ப்ரீ- வெட்டிங் சூட் செய்த மருத்துவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஒப்பந்த மருத்துவரான டாக். அபிஷேக் தனது மனைவியுடன் அறுவை சிகிச்சை அறையில், நோயாளி ஒருவருக்கு சிகிச்சை அளிப்பது போல போட்டோசூட் எடுத்துள்ளார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதைத் தொடர்ந்து, பலர் தங்கள் கண்டனங்களை தெரிவித்தனர். இதனையடுத்து மருத்துவர் அபிஷேக் மாவட்ட நிர்வாகத்தால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
இதுகுறித்து கர்நாடக மாநில் சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் கூறியதாவது;
“சித்ரதுர்கா அரசு மருத்துவமனையின் அறுவை சிகிச்சை அறையில் திருமண போட்டோஷூட் நடத்திய மருத்துவர் பணிநீக்கம் செய்யப்பட்டார். அரசு மருத்துவமனைகள் மக்களின் சுகாதாரத்துக்காக இருக்கிறதே தவிர, தனிப்பட்ட வேலைக்காக அல்ல. எனவே மருத்துவர்களின் இத்தகைய ஒழுங்கீனத்தை பொறுத்துக்கொள்ள முடியாது” என தெரிவித்துள்ளார்.