“முத்துராமலிங்க தேவருக்கு புகழ் சேர்க்ககூடிய பல்வேறு திட்டங்களை திமுக அரசு நிறைவேற்றியது” - முதலமைச்சர் #MKStalin!
தேவருக்கு புகழ் சேர்க்கக்கூடிய பல்வேறு திட்டங்களை திமுக அரசு நிறைவேற்றி இருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் 117-வது ஜெயந்தி விழா மற்றும் 62-வது குருபூஜை விழா, நேற்று முன்தினம் தேவர் நினைவாலய நிர்வாகத்தின் சார்பில் ஆன்மிக விழா யாகசாலை, லட்சார்ச்சனை பெருவிழாவுடன் தொடங்கியது.
இந்நிலையில் பசும்பொன் தேவர் நினைவிடத்தில் இன்று (அக்.30) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று, முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து, நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
முத்துராமலிங்கனார் மறைவிற்கு பின்னும் இன்னும் வீரராக போற்றப்படுகிறார் என முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி புகழ்ந்து பேசியிருக்கிறார். அத்தகைய தியாகியை போற்றக்கூடிய அரசாக, திமுக அரசு செயல்பட்டு வருகிறது என அனைவருக்கும் தெரியும். பசும்போன் தேவரை போற்றி திமுக அரசு செய்திருக்கக்கூடிய பல்வேறு செயல்பாடுகளில் சிலவற்றை நான் சுட்டிக்காட்டுகிறேன்.
மதுரை மாநகரில் மாபெரும் வெண்சிலை. பசும்பொன் மண்ணில் நினைவில்லம். மேலநீலிதநல்லூர், கமுதி, உசிலம்பட்டி ஆகிய இடங்களில் 3 அரசு கலை, கல்லூரிகள். மதுரை ஆண்டாள்புரத்தில் முத்துராமலிங்கனார் பாலம். காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் கல்வி அறக்கட்டளை. மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர்மரபினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 20% ஒதுக்கீடு. கடந்த 2007-ல் நூற்றாண்டு விழாவை மிக எழுச்சியாக கொண்டாடினோம். அப்போது அவர் வாழ்ந்த இல்லம் புதுப்பிக்கப்பட்டது.
விழாவை அடையாளம் காட்டும் வகையில் வளைவு அமைக்கப்பட்டது. நூலக கட்டடம், பால் குடங்கள் வைப்பதற்கு மண்டபம், முளைப்பாரி மண்டபம் என தேவருக்கு புகழ் சேர்க்கக்கூடிய பல்வேறு திட்டங்களை நாம் நிறைவேற்றி இருக்கிறோம்.
தற்போது முத்துராமலிங்கத் தேவரின் 117வது பிறந்தநாளை முன்னிட்டு, குருபூஜை நடத்தி இருக்கிறோம். பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் தமிழ்நாடு அரசு அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாக செய்துள்ளது. நேற்று முன்தினம் முத்துராமலிங்க தேவர் அரங்கம் திறந்து வைக்கப்பட்டது. இதுபோல அவரைப் போற்றக்கூடிய செயல்களையும், திட்டங்களையும் தொடர்ந்து செய்வோம்.
மீனவர் பிரச்னைகள் சம்பந்தமாக தொடர்ந்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதுகிறோம். டெல்லி செல்லும்போதெல்லாம் பிரதமரிடம் பேசி வருகிறேன். வெளியுறவுத் துறை அமைச்சரிடமும் குறிப்பிட்டு காட்டியுள்ளேன். அவர்களும் எங்கள் கடிதத்திற்கு மதிப்பளித்து, தொடர்ந்து விடுதலை செய்து வருகின்றனர். இருப்பினும் இந்த பிரச்னை தொடர்கிறது. இருப்பினும் இதற்கு முடிவு காணப்பட வேண்டும் என தொடர்ந்து பேசி வருகிறோம். 2008 ஆம் ஆண்டு கருணாநிதி முதலமைச்சராக இருந்த போது, காவிரி குண்டாறு இணைப்புத் திட்டத்தின் முதற்கட்டப் பணி துவங்கப்பட்டது. அதற்குபின் வந்த அதிமுக அதனை கிடப்பில் போட்டது.
தொடர்ந்து நாம் ஆட்சிக்கு வந்தப்பிறகு பணிகள் துரிதப்படுத்தப்பட்டு, 40% பணிகள் முடிக்கப்பட்டுள்ளன”
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.