”வாக்காளர் திருத்தப் பணியில் ஈடுபட்டுள்ளவர்களின் கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற வேண்டும்” - ராமதாஸ் வலியுறுத்தல்..!
பாமக நிறுவனர் இராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
”தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் கடந்த நவம்பர் 4-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதுவரை 95 விழுக்காடு வீடுகளுக்கு வாக்காளர் கணக்கெடுப்பு படிவம் கொடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் இந்த பணிகளை மேற்கொள்வதில் நெருக்கடிகள் உள்ளதாகவும், கூடுதல் நிதி ஒதுக்கப்படவில்லை, ஆய்வுக்கூட்டம் என்ற பெயரில் அலைக்கழிக்கப்படுவதாகவும் கூறி நேற்று மாவட்ட தலைநகரங்களில் அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும் இன்று முதல் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணியை புறக்கணிக்கப் போவதாகவும் கூறினர். அதற்கு தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் வேலைநிறுத்த நாட்களில் பணிக்கு வராத அரசு அலுவலர்கள், ஊழியர்கள் அனுமதி இல்லாத விடுப்பாக கருதப்பட்டு சம்பளம் பிடிக்கப்படும் என்றும், பகுதி நேர, தினசரி ஊதிய ஊழியர்கள் பணியிலிருந்து நீக்கப்படக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வாக்குச்சாவடி நிலை அலுவலர்களில் பெரும்பாலானவர்கள் ஆசிரியர்கள், அங்கன்வாடி மற்றும் சத்துணவு பணியாளர்கள் என்பதால் தினசரி மாலை மற்றும் மதியம் வரை பணியாற்றுபவர்கள் வழக்கமான அவர்களது பணியை முடித்துவிட்டு இந்தப் பணியையும் மேற்கொள்வதில் அவர்களுக்கு சிரமங்கள் இருக்கிறது. அதனால் மாலை நேரங்கள், வார இறுதி மற்றும் விடுமுறை நாட்களில் இந்தப் பணியை மேற்கொள்ளும் பட்சத்தில் வாக்காளர்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களை எளிதில் தொடர்பு கொண்டு அல்லது சந்தித்து படிவங்களை நிதானமாக பூர்த்தி செய்து கொடுப்பதில் வாக்காளர்களுக்கும் சிரமங்கள் இருக்கிறது.
இந்த நிலையில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணங்களை பெற்று தேர்தல் பிரிவில் ஒப்படைப்பதற்கு 30 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ள நிலையில், சில மாவட்ட ஆட்சியர்கள் அவசர கதியில் இப்பணிகளை முடிக்குமாறு நிர்ப்பந்தப்படுத்துவதாக கூறுகிறார்கள். இப்பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் தங்கள் பணி நேரங்களையும் கடந்து கூடுதல் நேரங்கள் மற்றும் விடுமுறை நாட்களிலும் பணியாற்றுவதால் கூடுதலாக ஒரு மாத ஊதியத்தை மதிப்பூதியமாக வழங்க வேண்டும் என்கிற கோரிக்கை நியாயமானது. எனவே அனைத்து கோரிக்கைகளையும் அரசு பரிசீலித்து உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.
அதுபோல், போலி வாக்குகளை களைவதற்கு இந்த சிறப்பு வாக்காளர் தீவிர திருத்த பணி அவசியமானது தான் என்ற போதிலும் இந்த சீரிய பணியை செம்மையாகவும், சிறப்பாகவும், பிழையின்றியும் செய்து முடிப்பதற்கு முழுமையான ஒத்துழைப்பை மாநில அரசும் வழங்க வேண்டும். தேர்தல் ஆணையம் தேவைப்பட்டால் மேலும் 15 நாட்கள் கூடுதல் அவகாசம் கொடுத்து மற்ற மாநிலங்களில் குற்றச்சாட்டுகள் எழுந்தது போல் அல்லாமல் தமிழ்நாட்டில் சிறப்பாக இந்த பணியை செய்து முடித்தார்கள் எனுமளவில் நிறைவாக செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.