காவிரி ஆற்றில் அடித்து வரப்பட்ட உயிரிழந்த யானை!
கர்நாடகாவில் இருந்து ஆற்றில் அடித்துவரப்பட்ட உயிரிழந்த யானையால், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் பருகும் மக்களுக்கு உடல் உபாதைகள் ஏற்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் காவிரி கரையோர பகுதியில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு பெண்
யானை ஒன்று உயிரிழந்தது. பின்னர் இது குறித்து தகவலறிந்த சம்பவ இடத்திற்கு வந்த கர்நாடக மாநில வனத்துறையினர் யானைக்கு பிரேத பரிசோதனை செய்துவிட்டு, யானையை அடக்கம் செய்யாமல் காவிரி கரையோர பகுதியிலேயே விட்டு சென்றனர். இந்த சூழலில் கர்நாடக அணைகளில் இருந்து வெளியேற்றப்பட்டு வரும் உபரிநீரில் உயிரிழந்த யானை அடித்து வரப்பட்டது.
இந்த யானை பிலிகுண்டுலு வழியாக மிதந்து வந்து தற்போது தமிழக எல்லையில் ஆற்றின் நடுவே உள்ளது. உயிரிழந்த காட்டு யானைக்கு பிரேத பரிசோதனை செய்து இருப்பதால், அதன் உடல் பாகங்கள் தண்ணீரில் கலந்து மாசு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் பருகும் கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்ட மக்களுக்கு காய்ச்சல், தொற்று நோய் பரவுதல் உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. யானை ஆற்றில் அடித்து வரப்பட்டதை அறிந்த கர்நாடக வனத்துறையினர் யானையை மீட்டு கர்நாடகா வனப்பகுதியிலேயே அடக்கம் செய்ய முடிவுசெய்துள்ளதாக தமிழ்நாடு வனத்துறையினரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.