விஷச் சாராய விவகாரத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் தகனம் செய்யப்பட்டன!
கள்ளக்குறிச்சி விஷச் சாராய விவகாரத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் தகனம் செய்யப்பட்டன.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் விஷச் சாராயம் அருந்தியதில் இதுவரை 38 பேர் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் தொடர்ந்து தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவத்திற்கு எதிர்க் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், எ.வ.வேலு உள்ளிட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்தனர். மேலும் உள்துறை முதன்மைச் செயலாளர் அமுதா கள்ளக்குறிச்சிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்.
விஷச்சாராயம் விற்பனை செய்த குற்றவாளியான சின்னத்துரையின் சொந்த கிராமமான சேஷசமுத்திரத்திலும் உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது. சேஷசமுத்திரத்தில் சின்னத்துரையிடம் கள்ளச்சாராயம் வாங்கி பருகியவர்கள் உயிரிழந்துள்ளனர். கள்ளக்குறிச்சி கருணாபுரத்தை தொடர்ந்து சேஷசமுத்திரத்திலும் விஷச்சாராய விற்பனை நடந்துள்ளது அம்பலமாகியுள்ளது. விஷச்சாராய வழக்கில் குற்றவாளி கன்னுக்குட்டிக்கு சாராயம் கொடுத்த சின்னத்துரையின் சொந்த கிராமத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராஜேந்திரன் என்பவர் உயிரிழந்துள்ளார். இதன்மூலம் தற்போது வரை கள்ளக்குறிச்சி விஷச் சாராயம் அருந்தி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது.
இந்த நிலையில் ஒரே நேரத்தில் 28 உடல்கள் இறுதி சடங்கு நடைபெற்றது. கருணாபுரம் கோமுகி ஆற்றங்கரையில், உயிரிழந்த 28 பேரின் உடல்களுக்கு இறுதி சடங்கு இன்று மாலை நடைபெற்றது. 21 பேரின் உடல்கள் தகனம் செய்யப்பட்ட நிலையில், 7 பேரின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டது.