''பாஜகவின் 10 ஆண்டு கால ஆட்சியில் நாட்டின் பொருளாதாரம் மாற்றத்தை கண்டுள்ளது'' - நிர்மலா சீதாராமன்
2024-25-ம் ஆண்டுக்கான மத்திய இடைக்கால நிதிநிலை அறிக்கையை நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (பிப். 1) தாக்கல் செய்தார்.
நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. நடப்பு ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உரையுடன் கூட்டத்தொடர் தொடங்கியது. இதையடுத்து இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதுவரை 5 முறை முழு பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ள நிர்மலா சீதாராமன், தொடர்ந்து 6-வது முறையாக இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
கடந்த 10 ஆண்டுகளில் இந்தியப் பொருளாதாரம் மிகப்பெரிய மாற்றத்தைக் கண்டுள்ளது . நாட்டு மக்கள் எதிர்காலத்தை நம்பிக்கையுடன் பார்க்கின்றனர். கிராமப்புற வளர்ச்சிக்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நாட்டில் உணவு பற்றிய கவலை குறைந்துள்ளது. ஏழைகள், பெண்கள், இளைஞர்கள் மற்றும் விவசாயிகள் மீது நாம் அதிக கவனம் செலுத்த உள்ளோம்.
சுமார் 80 கோடி மக்களுக்கு அரசு இலவச உணவு தானியங்களை வழங்கி வருகிறது. ஒவ்வொரு வீட்டிற்கும் வீடு, மின்சாரம், குடிநீர் வழங்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. 2047ஆம் ஆண்டுக்குள் நாட்டை அபிவிருத்தி செய்வதே எமது நோக்கமாகும். விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க அரசு முயற்சித்து வருகிறது. அரசாங்கத்தின் கவனம் தொடர்ந்து ஏழைகள், பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு அதிகாரமளிப்பதில் உள்ளது.
உள்கட்டமைப்பு வளர்ச்சி, வேகம் எடுத்துள்ளது. அரசின் திட்டங்கள் மக்களை சென்றடைகின்றன. வறுமையை ஒழிக்க அரசு செயல்பட்டு வருகிறது. சவால்களை அரசு துணிச்சலாக எதிர்கொண்டுள்ளது. கிராமப்புற வளர்ச்சிக்கான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. குடிநீர் திட்டம் மூலம் நாட்டின் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
நாட்டிற்கும், உலகிற்கும் தேவையான உணவை உற்பத்தி செய்ய விவசாயிகளுக்கு இந்த திட்டம் உதவுகிறது. பெண் தொழில்முனைவோருக்கு 30 கோடி முத்ரா யோஜனா கடன் வழங்கப்பட்டுள்ளது. 10 ஆண்டுகளில் உயர்கல்வியில் பெண்களின் சேர்க்கை அதிகரித்துள்ளது.