குப்பையை அகற்ற புகாரளித்த இளைஞரை தாக்கிய கவுன்சிலரின் கணவர்! நியூஸ்7 தமிழ் எதிரொலியாக இரு தரப்பினர் மீதும் வழக்குப்பதிவு!
மேட்டுப்பாளையத்தில் குப்பையை அகற்றக் கோரி புகாரளித்த இளைஞரை தாக்கிய விவகாரத்தில் காங்கிரஸ் பெண் கவுன்சிலர், கணவர், மற்றும் அவர்களது மகன் மீது 3 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சிக்குட்பட்ட 23 வது வார்டு பகுதியான
ரயில்வே காலனி பகுதி சார்ந்தவர் கௌதம். பட்டதாரியான இவர் அந்தப் பகுதியில் அவரது குடும்பத்தினருடன் வாழ்ந்து வரக்கூடிய நிலையில் ரயில்வே காலனி பகுதியில் கடந்த சில மாதங்களாக சரிவர தூய்மை பணி மேற்கொள்ளாமலும் சாக்கடைகள் தூர்வாராமலும் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
அந்த பகுதியில் குப்பைகள் தேங்கியும், கழிவு நீரால் துர்நாற்றம் வீசியதால் கௌதம் எனபவர் இது குறித்து நகராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்துள்ளார். இதனால், ஆத்திரம் அடைந்த நகராட்சி 23 வது வார்டு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த
நகர்மன்ற உறுப்பினர் கவிதா மற்றும் அவரது கணவர் புருஷோத்தமன் ஆகிய இருவரும்
ரயில்வே காலனி வசிக்கக்கூடிய கௌதம் வீட்டுக்கு சென்று அவரை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள் : தலைநகரில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் – மத்திய அரசுக்கு டெல்லி அமைச்சர் அதிஷி கடிதம்!
இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் ஒரு கட்டத்தில் வாக்குவாதம் பெரிதாகி
திடீரென புருஷோத்தமன் கௌதமை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் கௌதமுக்கு
கழுத்தில் எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையில் தற்போது சிகிச்சைக்காக கோவை அரசு
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நடைபெற்ற போது கவுன்சிலரின் கணவர் புருஷோத்தமன் கௌதமை தாக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த சம்பவம் குறித்து கௌதம் காவல்துறையினரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். அது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில், இளைஞர் மீது தாக்கப்பட்ட விவகாரத்தில், மேட்டுப்பாளையத்தில் நகராட்சி கவுன்சிலரின் கணவர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 23 வது வார்டு நகராட்சி கவுன்சிலர் கவிதா மற்றும் அவரது கணவர் புருஷோத்தமன் மகன் கார்த்திக் ஆகிய மூன்று பேர் மீதும் மூன்று பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதேபோல கவுன்சிலர் கவிதா அளித்த புகாரின்பேரில் கௌதம் மற்றும் அவரது தாய் பிரபாவதி ஆகியோர் மீதும் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.