“நீதித்துறை, நாடாளுமன்றத்தைவிட அரசியலைப்பு சட்டமே உயர்ந்தது” - தலைமை நீதிபதி பி.ஆர். கவாய்!
உச்ச நீதிமன்றத்தின் 52-ஆவது தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் அண்மையில் பதவியேற்றார். இந்நிலையில் அவருக்கு பாராட்டு விழாவும், மாநில வழக்குரைஞர்களின் கருத்தரங்கையும் மகாராஷ்டிரம் மற்றும் கோவா பார் கவுன்சில் மும்பையில் நேற்று நடத்தியது. இதில் பங்கேற்று பேசிய நீதிபதி பி.ஆர்.கவாய்,
“நீதித்துறையோ, நிர்வாகத் துறையோ, நாடாளுமன்றமோ உயர்ந்தவை அல்ல. இந்திய அரசியலமைப்புச் சட்டமே உயர்ந்தது. இந்த மூன்று பிரிவுகளும் அரசியலமைப்பின் படியே செயல்பட வேண்டும். ஜனநாயகத்தின் இந்த மூன்று தூண்களும் ஒன்றுக்கொன்று உரிய பரஸ்பரத்தோடும், மரியாதையோடும் நடந்து கொள்ள வேண்டும்.
அரசியலமைப்பை திருத்துவதற்கு நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது. ஆனால் அது சட்டத்தின் அடிப்படை கோட்பாட்டு கட்டமைப்பைத் தொட முடியாது என்றும்” தலைமை நீதிபதி கவாய் கூறினார்.
சமீபத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதற்கு, கண்டனம் தெரிவித்த துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர், நீதித்துறை சூப்பர் பார்லிமெண்ட் ஆக முடியாது எனக் கூறியிருந்தார். இது பெரும் பேசுபொருள் ஆன நிலையில், பல தரப்பிலிருந்தும் அவரது பேச்சுக்கு கண்டனங்களும் எழுந்தது.
இந்நிலையில் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் இடமிருந்து இந்த கருத்து வந்துள்ளது.