“குறியீடு முக்கியமில்லை, அதற்குப் பின்னால் வரும் எண்கள்தான் முக்கியம்” - ப.சிதம்பரம்!
தமிழ்நாடு அரசின் 2025-26 ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையின் விளம்பரத்தில் இந்தியா ரூபாயின் குறியீடுக்கு (₹) பதிலாக ‘ரூ’ இலச்சினை பயன்படுத்தப்பட்டது. தமிழ்நாட்டில் தற்போது மும்மொழிக் கொள்கைக்கு பெரும் எதிர்ப்பு எழுந்துவரும் நிலையில், தமிழ் மொழியை முன்னிறுத்தும் விதமாக, மாநில அரசு இன்றைய பட்ஜெட் தாக்கலை முன்னிட்டு வெளியிட்டுள்ள விளம்பரத்தில் பணத்தின் மதிப்பை ரூ இலச்சினை கொண்டு குறிப்பிட்டுள்ளது.
இது தற்போது இந்திய அளவில் பெரும் பேசுபொருள் ஆகியுள்ளது. தமிழ்நாடு இருமொழிக் கொள்கையைத்தான் பின்பற்றும் என முதலமைச்சர் ஸ்டாலின் மட்டுமின்றி தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சி தலைவர்களும் திட்டவட்டமாக கூறி வருகின்றனர்.
இந்நிலையில் இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மக்களவை உறுப்பினர் ப.சிதம்பரம்,
“மாநில அரசு கல்விக்காக நிதி ஒதுக்கியதை வரவேற்கிறேன். இதை பார்த்தாவது மத்திய அரசிற்கு வெட்கம் வந்தாவது நிதியை விடுவிப்பார்கள் என நம்புகிறேன். ரூபாய் குறியீட்டை பயன்படுத்துவதாக இருந்தால் பயன்படுத்தலாம், கட்டாயமல்ல. குறியீடிற்கு பிறகு வரும் எண்கள் தான் முக்கியம். எண்களைதான் பார்க்க வேண்டும்” என தெரிவித்தார்.