மக்களவை தேர்தலுக்கு முன் குடியுரிமைத் திருத்தச் சட்டம் அமலுக்கு வரும் - அமித்ஷா பேச்சு!
நாடாளுமன்ற தேர்தலுக்குள் குடியுரிமைத் திருத்தச் சட்டம் அமலுக்கு வரும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்த சட்ட (சிஏஏ) மசோதா நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து இந்த சட்டம் 2020-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக இருந்தது. எனினும் இதற்கான விதிமுறைகள் வகுக்கப்பட்ட பிறகு இந்த சட்டம் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனால் இந்த சட்டம் இதுவரை அமலாகவில்லை.
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் சிறுபான்மையினராக வசிப்பவர்கள், மதரீதியிலான துன்புறுத்தல் காரணமாக அங்கிருந்து வெளியேறி இந்தியாவில் அகதிகளாக தஞ்சமடைந்தால் குடியுரிமை வழங்க இந்த சட்டம் வகை செய்கிறது. குறிப்பாக, இந்த 3 நாடுகளிலிருந்து இந்தியாவில் தஞ்சமடைந்த இந்து, சீக்கியம், பவுத்தம், சமணம், பார்சி, கிறிஸ்தவம் ஆகிய 6 மதங்களைச் சேர்ந்தவர்கள் இதன் மூலம் பயன் அடைவார்கள்.
இந்நிலையில், விரைவில் சிஏஏ சட்டம் நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் என்று அரசுத் தரப்பில் சொல்லப்பட்டு வரும் நிலையில், இதை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று (பிப். 10) உறுதி செய்துள்ளார். டெல்லியில் தனியார் விடுதியில் இன்று நடைபெற்ற உச்சி மாநாட்டில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியதாவது,
குடியுரிமை வழங்குவதற்காக சிஏஏ சட்டம் கொண்டு வரப்பட்டது. இது யாருடைய குடியுரிமையையும் பறிக்காது. சிஏஏ என்பது வங்கதேசம் மற்றும் பாகிஸ்தானிலிருந்து வரும் அகதிகளுக்குக் குடியுரிமை வழங்குவதற்கான ஒரு செயலாகும்" என்று கூறியுள்ளார்.
முன்னதாக, தமிழ்நாட்டில் சிஏஏ சட்டத்தைக் கால் வைக்க விடமாட்டோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார். அதுபோன்று அதிமுகவும் சிஏஏ சட்டத்தை அனுமதிக்காது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார்.