Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் புதிய நினைவிடம் - பிப்.26ம் தேதி திறந்து வைக்கிறார் முதலமைச்சர்!

02:17 PM Feb 24, 2024 IST | Web Editor
Advertisement

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் புதிய நினைவிடத்தை பிப். 26 ஆம் தேதி  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

Advertisement

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது :

“உலகத் தமிழினத்தின் மிக உயர்ந்த தலைவர்களாகத் திகழ்ந்த முன்னாள் முதலமைச்சர் அண்ணா  1969-பிப்ரவரி 3ஆம் நாள் மறைந்தபின் அவருக்குச் சென்னைப் பல்கலைக்கழகத்தின் எதிரில் நினைவிடம் அமைக்கப்பட்டது. அதனை மிகச் சிறந்த கட்டடக்கலை வடிவமைப்புடன் 1969 ஆம் ஆண்டில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அமைத்தார்.

தமிழ்நாட்டு வரலாற்றில் 19 ஆண்டு காலம் முதலமைச்சராக இருந்த கருணாநிதி தனது 95வது வயதில் 2018 ஆகஸ்ட் மாதம் 7ஆம் தேதி மறைந்த நிலையில், நீதிமன்றத்தின் ஆணை பெற்று பேரறிஞர் அண்ணா நினைவிடம் அருகிலேயே இவருக்கு நினைவிடம் அமைக்கப்பட்டது. மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா, கருணாநிதி  ஆகியோரின் இரண்டு நினைவிடங்களும் 8.57 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளன.

சென்னைக் கடற்கரை காமராசர் சாலையில் அமைந்துள்ள இந்த நினைவிடங்களின் முகப்பு வாயிலில்  ‘பேரறிஞர் அண்ணா நினைவிடம்’, ‘முத்தமிழறிஞர் கலைஞர் நினைவிடம்’ எனும் பெயர்கள் அழகுறப் பொறிக்கப்பட்டுள்ளன.நுழைவு வாயிலைக் கடந்து உள்ளே சென்றால் எதிரில் அமர்ந்து படிப்பது போன்ற தோற்றத்தில் பேரறிஞர் அண்ணாவின் சிலை மற்றும் வலபுறம் இளங்கோவடிகள், இடப்புறம் கம்பர் சிலைகள் அமைந்து நம்மை மகிழ்விக்கின்றன. நினைவிடங்களின் முன்பகுதி இருபுறங்களிலும் பழமையான புல் வெளிகள் அமைந்துள்ளன. இடப்புறத்தில் அண்ணா அருங்காட்சியகம் அமைந்துள்ளது.

இதையும் படியுங்கள் : சிங்காரச் சென்னையை, சீர்மிகு சென்னையாக உருவாக்கியது திமுக – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

அண்ணா சதுக்கம் அமைந்துள்ள பகுதியைச் சுற்றி அமைந்த மண்டபங்கள் வெண்மை நிறத்தில் பளிச்சிடுகின்றன. "எதையும் தாங்கும் இதயம் இங்கே உறங்குகிறது." எனப் பொறிக்கப்பட்டுள்ள அண்ணாவின் சதுக்கத்தைக் கடந்து சென்றால், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அமர்ந்து எழுதும் வடிவிலான சிலையை காணலாம். சதுக்கத்தில், "ஓய்வெடுத்துக் கொள்ளாமல் உழைத்தவர் இங்கே ஓய்வு கொண்டிருக்கிறார்" எனும் தொடர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் எண்ணப்படியே பொறிக்கப்பட்டுள்ளது.

சதுக்கத்தின் பின்புறம் கருணாநிதியின் புன்னகை பூத்தமுகம் பொன்னிறத்தில் மிளிர்வதுடன் சுற்றிலும் மின்விளக்குகள் விண்மீன்களாக ஒளிர்கின்றன.
கருணாநிதியின் சதுக்கத்தின் கீழே நிலவறைப் பகுதியில், "கலைஞர் உலகம்" எனும் பெயரில் ஓர் அருமையான அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. கலைஞர் உலகம் பகுதியில் இடப்புறம் சென்றால் நடைபாதையின் வலப்புறத்தில் கருணாநிதி நிர்மாணித்த திருவள்ளுவர் சிலை, குடிசை மாற்றுவாரியம் முதலியவை படங்களாக அமைக்கப்பட்டு விளக்கொளியுடன் மிளிர்கின்றன.

உள்ளே வலப்பக்கம் திரும்பினால், இடப்பக்கச் சுவரில் தமிழ்த்தாய் வாழ்த்து பொறிக்கப்பட்டுள்ளது. அதன் கீழ்ப்புறம், தமிழ்த்தாய் வாழ்த்து அரசு நிகழ்ச்சிகளில் பாடப்பட வேண்டும் என கருணாநிதியால் 23-11-1970 அன்று பிறப்பித்த அரசாணையும், தமிழ்த் தாய் வாழ்த்து மாநிலப் பாடல் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  17-12-2021 அன்று பிறப்பித்த அரசாணையும் அவர்களின் படங்களுடன் இடம் பெற்றுள்ளன.

அருகில், கருணாநிதியின் எழிலோவியங்கள் எனும் அறை அதில் கருணாநிதியின் இளமைக் காலம் முதல், அவர் வரலாற்றில் இடம் பெற்ற நிகழ்வுகள், அவரின் படைப்புகள் அவர் சந்தித்த போராட்டங்கள், நிறைவேற்றிய பல்வேறு திட்டங்கள் தொடர்பான புகைப் படங்கள் அமைந்து நமக்கு மலைப்பைத் தருகின்றன. அடுத்து "உரிமைப் போராளி கலைஞர்" எனும் தலைப்பைக் கொண்ட அறையில் நுழைந்தால், தேசியக் கொடியை மாநில முதலமைச்சர்கள் ஏற்றிட உரிமை பெற்றுத் தந்த கருணாநிதியின் வெற்றியைக் குறிக்கும் வகையில் சென்னைக் கோட்டையில் முதல் தேசியக் கொடியை ஏற்றி வைத்து கருணாநிதி உரையாற்றும் காட்சி அமைப்புடன் பின்புறம் தலைமைச் செயலகத்தின் முகப்புத் தோற்றம் அமைந்து நம்மை வரவேற்கிறது.

கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதி அமர்ந்திருக்கும் தோற்றம் அருகில் நின்று புகைப்படம் எடுக்கலாம். சில நிமிடங்களில் புகைப்படம் நமக்கும் கிடைக்கும் வசதி அமைக்கப்பட்டுள்ளது. வலப் புறத்தில் கருணாநிதியின் மெழுகுச் சிலையாக நின்று நம்மை மகிழ வைக்கிறார். கருணாநிதியின் படைப்புகள் நெஞ்சுக்கு நீதி, குறளோவியம் தென்பாண்டிச் சிங்கம் முதலான 8 நூல்களின் பெயர்கள் காணப்படும். அவை ஒவ்வொன்றின் மீதும் நாம் கை வைத்தால் அந்த நூல் பற்றிய விளக்கம் வீடியோவாகத் தோன்றி நமக்கு அவற்றை எடுத்து உரைக்கும்.

"அரசியல் கலை அறிஞர் கலைஞர்" எனும் அறையில், எதிரே கருணாநிதியின் பெரிய நிழற்படம். வலப்பக்கம் இருக்கைகள் அமைக்கப்பட்டு, அவற்றின் எதிரில் வெள்ளித்திரை. அதில், ஏறத்தாழ 20 நிமிடங்கள் கருணாநிதியின் பிறப்பு முதல் இறுதி நாள் வரையான முக்கிய வரலாற்று நிகழ்வுகள் அருமையான படக் காட்சிகளாக, கலையும் அரசியலும் எனும் தலைப்பில் நம்முன் தோன்றி நம்மை வியக்கவைக்கும்.

அடுத்த அறையில், "சரித்திர நாயகனின் சாதனைப் பயணம்" தலைப்புடையது. அதில் நுழைந்தால் திருவாரூர் முதல் சென்னை வரை ரயிலில் பயணிப்பது போன்ற உணர்வை நமக்கு ஏற்படுத்தும். நாம் அமர்ந்த நிலையில், தஞ்சை, திருச்சி, மதுரை, நெல்லை, சேலம் ரயில் நிலையங்களைக் கடந்து சென்னையை அடையலாம். அந்தந்த ஊர்களில் கருணாநிதி வாழ்வோடு தொடர்புடைய நிகழ்வுகள் காட்சிகளாகத் தோன்றும். வழியில் யானையொன்று நாம் பயணிக்கும் ரயில் பாதையை மறித்து நின்று நமக்கு வணக்கம் செலுத்தி, வாழ்த்துவது நம்மை மெய் சிலிர்க்க வைத்திடும். கிடைக்கும் வசதி அமைக்கப்பட்டுள்ளது. வலப்புறத்தில் கருணாநிதியின் மெழுகுச் சிலையாக நின்று நம்மை மகிழ வைக்கிறார்.

ரயில், அண்ணா நூற்றாண்டு நூலகம் ஆகிய முத்தமிழறிஞர் கலைஞர் படைத்த நவீனங்களின் தோற்றம் வண்ண விளக்கொளியில் நம்மை மயங்க வைக்கின்றன.
இவற்றையெல்லாம் பார்த்து வெளியேவர நினைத்தால், கருணாநிதி கலந்து பேசிப் பழகிய ஓர் புதிய அற்புத உணர்வு நமக்கு ஏற்படும்.

வெளியே வரும்போது இருபுறங்களிலும் கருணாநிதியின் பொன்மொழிகள் கற்பாறைகளில் தமிழிலும் ஆங்கிலத்திலும் பொறிக்கப்பட்டு நம் இதயத்திலும் பதியும் வண்ணம் அருமையாக அமைக்கப்பட்டுள்ளன. மொத்தத்தில் புதுப்பிக்கப்பட்ட அண்ணா நினைவிடமும், கருணாநிதியின் நினைவிடமும் பல ஆண்டுகள் வரை நம் நெஞ்சைவிட்டு என்றும் நீங்காமல் நம்மை ஆட்கொண்டிருக்கும் என்பது மட்டும் உறுதி.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடத்தையும், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் புதிய நினைவிடத்தையும் பிப். 26 ஆம் தேதி மாலை 7 மணி அளவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.”

இவ்வாறு தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
CHIEF MINISTERCMOTamilNaduKarunanidhilate formermemorialMKStalin
Advertisement
Next Article