"சோதனைக்கு பயந்து நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் பங்கேற்றுள்ளார்" - எடப்பாடி பழனிசாமி!
கோவை விமான நிலையத்தில் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசியவர்,
"கடந்த 3 ஆண்டுகாலமாக பிரதமர் தலைமையில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் ஸ்டாலின் கலந்து கொள்ளவில்லை. அதற்கு பல காரணங்களை சொன்னார்கள். ஆனால் நேற்று நடந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். நாங்கள் கேட்பதெல்லாம் கடந்த 3 ஆண்டுகளாக ஏன் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. அப்படி கலந்து கொண்டிருந்தால் தேவையான நிதி கிடைத்திருக்கும்.
தமிழகத்தில் அமலாக்கத்துறை டாஸ்மார்க் துறையில் விசாரணை நடந்து கொண்டிருந்த சூழலில் இப்போது டெல்லியில் நடந்த கூட்டத்தில் பங்கேற்றது சந்தேகம் எழுகிறது. பிரதமருக்கு வெள்ளை கொடி பிடித்தவர் தான் ஸ்டாலின். எதிர்கட்சியாக இருக்கும் போது ஒரு நிலைப்பாடு, ஆளுங்கட்சியாக இருக்கும் போது ஒரு நிலைப்பாடு, மக்களின் பிரச்சனையை நிதி ஆயோக் கூட்டத்தில் சொல்லிருந்தால் பல நிதி கிடைத்திருக்கும்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது, ஒரு பொம்மை முதல்வர் ஆட்சி செய்தவதால் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டு கிடக்கிறது. அரக்கோணத்தில் ஒரு பெண் கொடுத்த புகாருக்கு ஏன் உடனடியாக புகார் பதிவு செய்யவில்லை. அவர் கொடுத்த புகாருக்கு சாதாரண பிரிவில் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். ஆனால் வழக்கு சம்பந்தபட்ட புகார் கொடுத்ததை ஊடகத்தில் வெளியிட்டு இருக்கிறார்கள். தனக்கு ஏற்பட்ட கொடுமையை ஆளுநரிடம் எடுத்து சொல்ல சென்றிருக்கிறார்.
ஆனால் அவரை புகார் கொடுக்க விடாமல் தடுத்து நிறுத்திருக்கிறார்கள். அதேபோல் கும்பகோணத்தில் ஒரு பெண்ணுக்கு கூட்டுபாலியல் நடந்திருக்கிறது. ஆனால் அதுதொடர்பான புகார்கள் வெளிவருகின்றன.
இந்த இருசம்பவத்தை கண்டித்து அரக்கோணத்திலும், கும்பகோணத்திலும் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். டாஸ்மாக் முறைகேட்டில் தீர்வு காணவே பிரதமரை தனிப்பட்ட முறையில் ஸ்டாலின் சந்தித்திருக்கிறார்.
பிரதமர் சொன்னால் தான் அவர்களுக்குள் என்ன பேசியிருந்தார்கள் என்பது தெரியும். மோடிக்கும் பயப்படமாட்டேன் ED க்கும் பயப்படமாட்டேன் என சொல்லும் உதயநிதி அவர் தம்பி ஏன் வெளிநாடு தப்பி செல்ல வேண்டும். யார் அந்த தம்பி ?
எதிர்க்கட்சியாக ஸ்டாலின் இருந்தபோது, பிரதமருக்கு கருப்பு பலூன் காட்டியவர், முதல்வர் ஆன பின் கருப்பு கொடி காட்டியவர். பிரச்னை வந்த பின் தனிப்பட்ட முறையில் பிரதமரை முதல்வர் சந்தித்துள்ளார். ஏன் தமிழ்நாட்டுக்கு தேவையான நிதியை பெற பிரதமர் சந்திக்கவில்லை? அரசியல் தலைவர்களுக்கும், பொதுமக்களுக்கும் பாதுகாப்பு இல்லை, உங்களுக்கும் வரும் என்றார்.
தொடர்ந்து முன்னாள் அமைச்சருக்கு மிரட்டல் வந்தது தொடர்பான கேள்விக்கு, போதை பழக்கம் தொடர்பான சட்டமன்றத்தில் நான் சொல்லும்போதே நடவடிக்கை எடுத்திருந்தால், இந்த நிலைமை வந்திருக்காது - நான் சொல்லும்போதே நடவடிக்கை எடுத்திருந்தால் முதல்வர் அறிக்கை வெளியிட தேவையில்லை என்றார்.
மேலும் பேசியவர், ரெட் அலர்ட்- மக்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். பிரச்சினை வந்ததால் தான் முதல்வர் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்று இருக்கிறார். கொலை மிரட்டல் எஸ்.பி.வேலுமணிக்கு வந்துள்ளது. உங்களுக்கும் வரலாம் பாதுகாப்பாக இருங்கள். போதை பொருள் நடமாட்டத்தை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். போதை ஆசாமிகள் தான் கொலை, கொள்ளை, போன்ற சம்பவங்களில் ஈடுபடுகிறார். டாஸ்மாக் அமலாக்கத்துறை வழக்கு, நீதிமன்ற விவகாரத்தில் அதிகம் பேசுவது சரியல்ல விசாரணை முடிந்து பேசுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.