“முதலமைச்சர் சந்திக்கவில்லை” - மாஞ்சோலை மக்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம்!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் மாவட்ட வாரியாக சென்று கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அந்தவகையில் இரு நாள் பயணமாக முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று (பிப். 6) நெல்லை சென்றார். கங்கைகொண்டான், சிப்காட் தொழிற்பூங்காவில் டாடா நிறுவனத்தின் சூரிய மின் உற்பத்தி ஆலையைத் தொடக்கிவைத்தார்.
தொடர்ந்து இன்றும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்டு 24 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 20 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். இதனிடையே நெல்லை வந்த முதலமைச்சர் மாஞ்சோலை மக்களை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியானது.
இதனால் மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் முதலமைச்சரை காண அவர் தங்கி இருக்கும் நெல்லை அரசு விருந்தினர் சுற்றுலா மாளிகை முன்பு குவிந்துள்ளனர். ஆனால் முதலமைச்சர் மக்களிடம் பேசாமல், வேனில் அமர்ந்தபடியே மனுக்களை மட்டும் பெற்றுக் கொண்டு சென்றதாக கூறப்படுகிறது.
https://www.facebook.com/watch/?v=661346179558547&rdid=DlFoRjP98ClQhJwn
கிராம மக்கள் முதலமைச்சரை சந்திக்க வரவழைக்கப்பட்ட நிலையில், சந்திக்க நீண்ட நேரம் அனுமதி வழங்கப்படாததால் அதிருப்தி அடைந்த மக்கள் முதலமைச்சர் தங்கி இருக்கும் அரசு விருந்தினர் சுற்றுலா மாளிகை முன்பு தரையில் அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நேரம் ஒதுக்கியும் தங்களை சந்திக்கத் தவிர்ப்பது ஏன்? என கோஷமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.