"இஸ்லாமியர்களின் ஹஜ் பயணத்திற்கு மத்திய அரசு துணை நிற்க வேண்டும்" - துரை வைகோ எம்.பி. வலியுறுத்தல்!
இஸ்லாத்தின் ஐந்து முக்கிய கோட்பாடுகளில் ஒன்றாக ஹஜ் கருதப்படுகிறது. பொருளாதார ரீதியாகவும், உடல் ரீதியாகவும் திறன் கொண்ட ஒவ்வொரு முஸ்லிமும் இந்த யாத்திரையை மேற்கொள்வது கடமை அல்லது கட்டாயம் என்று நம்பப்படுகிறது. இந்த காரணத்திற்காக, ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதிலுமிருந்து இஸ்லாத்தை பின்பற்றும் லட்சக்கணக்கான ஆண்களும் பெண்களும் ஹஜ் யாத்திரை மேற்கொள்வதற்காக சவுதி அரேபியாவின் மெக்காவில் கூடுகிறார்கள்.
அந்த வகையில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 52,000 ஹஜ் பயணிகள், தனியார் ஹஜ் சேவை நிறுவனங்களின் மூலமாக அதற்கான கட்டணங்களை செலுத்தி, நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவில் பதிவு செய்து, பயணத்திற்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே, சவுதி அரேபியாவின் ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம், மினா பள்ளத்தாக்கில் இந்திய தனியார் ஹஜ் சேவை நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த தங்குமிட ஒதுக்கீடுகளை ரத்து செய்து, அவற்றை இதர நாடுகளுக்கு மறு ஒதுக்கீடு செய்துள்ளது.
இந்த நிலையில், ஹஜ் பயணத்தை தனியார் மூலம் மேற்கொள்ள உள்ள இஸ்லாமியர்களுக்கு ஏற்பட்டுள்ள தடைகளை களைந்து அவர்கள் அனைவருக்கும் மினாவில் தங்குமிடத்தை உறுதி செய்துதர உரிய முயற்சிகளை மேற்கொண்டு இஸ்லாமியர்களின் புனித பயணத்திற்கு மத்திய அரசு துணை நிற்க வேண்டும் என துரை வைகோ எம்.பி. வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,
"இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஐந்தாவது கடமையான புனித ஹஜ் பயணத்தின் போது மினா பகுதியில் கூடாரத்தில் தங்குவது முக்கிய சடங்காகக் கடைபிடிக்கப்படுகிறது. 2025ம் ஆண்டிற்கான இந்தியர்களுக்கான ஹஜ் பயண ஒதுக்கீடு 1,75,025 ஆகும். அதில் 70:30 விகிதப்படி 1,22,518 நபர்கள் இந்திய ஹஜ் கமிட்டி மூலமும், மீதமுள்ள 52,507 நபர்கள் தனியார் பயண ஏற்பாட்டாளர்கள் மூலமும் ஹஜ் பயணத்தை மேற்கொள்ள உள்ளனர்.
தனியாருக்கு ஒதுக்கப்பட்ட 52,507 பயணிகளுக்கு மினாவில் தங்குமிட ஒதுக்கீடு செய்யப்படவில்லை. மினாவில் தங்காமல் ஹஜ் கடமை நிறைவேறாது என்பது இஸ்லாமியர்களின் நம்பிக்கை. இந்நிலையில், இந்த மினா தங்குமிடம் ஒதுக்கீடு செய்யப்படாத நிலைக்கு ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டிக்கொள்வதில் எவ்வித பயனுமில்லை. இதனால் பாதிக்கப்படப்போவது ஹஜ் செல்ல காத்திருந்த இஸ்லாமிய பெருமக்கள் தான்.
இந்த நேரத்தில், மத்திய அரசின் தலையீட்டால், சவுதி ஹஜ் அமைச்சகம் 10,000 இந்திய பயணிகளுக்கு மினாவில் தங்குமிடம் ஒதுக்கித் தருவதற்கு வேண்டிய பணிகளைச் செய்ய சம்மதித்துள்ளதாக செய்திகள் வருகின்றன. இது நல்ல முயற்சி என்றாலும், முழு எண்ணிக்கையான 52,507 பயணிகளுக்கும் மினாவில் தங்குமிடம் ஒதுக்கி, அவர்களின் ஹஜ் கடமையை எவ்விதத் தடையும் இன்றி நிறைவேற்றுவதற்கு உரிய அனைத்து ஏற்பாடுகளையும் மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்"
இவ்வாறு துரை வைகோ எம்.பி. தெரிவித்துள்ளார்.